தூபப்பேழை



இன்று சாயுங்காலம் எங்கள் ஊரின் பெரிய தலைகட்டில் ஒருவர்  என்னை அலைபேசியில் அழைத்து தம்பி அந்த மெசேஜ் சானல் க்கு எவ்வளவு இருப்பு இருக்கு  இந்த வருஷம் எவ்வளவு ஆகும் என்று கேட்டார். அக்டோபர்ல கூட்டத்துல பேசனும் சொன்னார் எங்கள் ஊரின் உள்ள அனைத்து தலைக்கட்டு வீட்டுப் பங்காளிகள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு கூட அவ்வளவு முன் தயாரிப்புகளில் ஈடுபடமாட்டார்கள். ஏன்? திருமணத்தின் அன்று கூட எந்த பரபரப்புமின்றி டிராவிட் போன்று இயல்பாக இருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதம் துவங்க இருக்கும் விழாவிற்கு அக்டோபர் மாதம் கூட்டம் போட இப்போது என்னை அழைத்தார். அக்டோபர் 2 ஆம் தேதி அல்லது முதல் ஞாயிறு எல்லா ஆண்டும் ஊர் திருவிழா கூட்டம் நடைபெறும். ஊரின் முந்தைய ஆண்டு திருவிழா கணக்குகள் முதலில் வாசிக்கபடும் அடுத்து சென்ற ஆண்டின் திருவிழாவின் நடந்த சிறப்புகள் மற்றும் குறைகள் அனைவராலும் கூறப்படும்.
அடுத்து அந்த ஆண்டின் மண்டாப்படி பெயர்கள் பரிசீலனை ஆரம்பிக்கபடும் ஏதும் புது சேர்க்கை இருக்கிறதா அல்லது யாரும் மண்டாப்படியில் இருந்து விலகுகிறார்களா என்று ஊர் வாரியாக ஒரு கணக்கெடுப்பு நடக்கும். அடுத்து வரிசையாக கோவில் கொடியேற்றத்திலிருந்து கொடி இறக்கம் வரை ஒவ்வொரு நாளும் சென்னை உறவின்முறை, திருச்சி, திண்டுக்கல், மானாமதுரை, சிவகங்க்கை என ஊரின் குடிகள் உள்ள ஊர் வரிசையில் ஒவ்வோரு நாளும் மண்டாப்படி குடும்பம் வாரியாக எழுதப்படும். கடைசி முன்று நாட்களில் முதல் நாள் மதுரை மக்களின் சிறப்பு அடுத்த இரு நாட்கள் தாயக மக்களின் மொத்த சிறப்பு அதனுடன் திருவிழாவும் கொடியிறக்கமும் முடிவிற்க்கு வரும் என்று விவாதம் முடிந்திருக்கும். அடுத்து மண்டாப்படி அன்று உணவு பற்றி அடுத்த விவாதம் தொடங்கி இருக்கும். கடைசி முன்று நாட்கள் தான் சிறப்பு அதனால் அந்த சமயம் கிடா விருந்து போட்றுவோம் என்று ஒரு தரப்பு கூற உடனே ஊர் தலைக்கட்டில் ஒருவர் எழுந்து யப்பா ஊர் பொது விருந்து அன்னைக்கு அசைவம் வேணாம்பா யாரச்சும் கறிகஞ்சியா பாத்தாலே சரக்க போட்டு வந்து ரூட்ட குடுப்பாங்கே அதனால நம்ம ஊர் மக்கள் இருக்க விருந்து மட்டும் கறி போட்டுகலாம் என்ற Strategic Advice பறக்கும். அடுத்த அந்த ஆண்டு தோராய செலவு, விளக்கு காண்ட்ராக்ட் பாத்திமா ரேடியோஸுக்கு குடுத்திடலாம், வெடி எந்த ஊர்க்கு கொடுக்கலாம் போன்ற தகவல்கள் அடுத்தடுது கூறப்படும். அடுத்து திருப்பலிக்கான கருத்து அருட்பணியாளருடன் விவாதிக்க படும், கொடி இறக்க திருப்பலி நம் மண்ணின் மைந்தர் வந்து தான் வைக்க வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்க படும். கிட்டதட்ட அந்த கூட்டத்திற்கு வருபவர்கள் Virtual ஆக ஒரு திருவிழாவையே கண்டுவிடுவார்கள்.
 திருவிழா டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கும்மாறு செய்யபடும் அதற்காக டிசம்பர் மாதம் ஊரின் நடுவில் இருக்கும் எங்கள்  ஆலயம் சுத்தம் செய்யப்படும். கோவிலில் உள்ள கெபி, சக்கிறிஸ்து அனைத்தும் சுத்தமிட்டு ஜோடிக்க படும் ஊரில் சமையலுக்காக உள்ள பாத்திரம் பித்தளை அண்டாக்கள், திருவாச்சி, வெண்கல பாத்திரங்கள், ஈய வட்டைகள், கேத்தல்கள் போன்றவற்றை எலுமிச்சம் பழம், புளி இவற்றைக் கொண்டு பளபளவென விளக்க ஆரம்பித்து விடுவார்கள். நாலு அடியில் இருந்து உக்காரும் இரும்பு நாற்காலியும்  ஆளுயுரம் வரை இருக்கும் சாப்பிடும் Table லும் சுத்தம் செய்யப்படும் . ஒரு குழு கோவில் சுத்தம்,ஒரு குழு காணிக்கை பொருட்கள், ஒரு குழு குருக்களுக்கான உணவு என்று தத்தமது பொறுப்பு பிரித்து கொடுக்கபடும். 

திசம்பர் மாத கொடியிறக்க நாளுக்கு முந்தைய வெள்ளி கூட்டம் வர ஆரம்பிக்கும் சனி கிழமை சாயுங்கால திருப்பலி கலை கட்டும் எங்களை மாறி இருப்பவர்களுக்கும் அது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் மிக பெரிய Get to Gather. சென்ற ஐந்து வருடங்களாக கடைசி மூன்று நாளும் ஊரில் உள்ள அனைவருக்கும் கோவிலில் தான் சாப்பாடு. 

சனிக்கிழமை சிறப்பு திருப்பலி க்கு அனைவரும் கூடிவிடுவோம், ஒரு புறம் திருப்பலி கருத்துகள் எழுதப்பட்டுகொண்டிருக்கும் ஒரு புறம் அறக்கட்டளை சார்பாக பரிசளிப்புக்கு தயார் ஆகி கொண்டிருக்கும். நாங்கள் எங்கள் நண்பர் குழாமுடன் ஐக்கியமாகி திருப்பலிக்கு உதவி செய்வது, ஆராதனைக்கும் பூக்கள் ஏற்பாடு செய்வது, சாப்பாடு வரிசையாக நாற்காலி போடுவது, பூந்தொட்டிகளை வைப்பது, திருப்பலி முடிந்து சப்பரம் தூக்குவது யார், அடிகால் பிடித்து கொண்டுவருவது யார் போன்ற செயல்திட்டங்கள் நடைபெறும். அடுத்து அங்க் அங்கு திருப்பலிக்கு உதவி செய்பவர்களுக்கு தூபத்திற்கு கரிகளை கங்காக்கி கொண்டிருப்போம், தூப பேழையை தூந்துவிடாமல் காற்றில் விசிறிக்கொண்டிருப்போம்.

அதனை கோவிலுக்கு வெளியே என் பால்ய நண்பன் செய்து கொண்டிருப்பான் கிட்டதட்ட வருடா வருடம் அதை தான் அவன் மற்க்காமல் செய்து தூபத்தை தூந்து விடாமல் பார்த்து கொள்வான். ஆனால் அவனுக்கு சிறு வயதில் இருந்தே தூபத்தை திருப்பலிக்கு நடுவில் மக்களுக்கும், அருட்பணியாளருக்கும் காட்ட வேண்டும் என்பது ஆசை அடிக்கடி என்னிடம் சொல்ல்வது டேய் இந்த தூபத்துல சாம்பிராணிக்கு பதிலா தசாங்கம் போடனும் டா கோவிலே மணக்கும்.   அவனுக்கு பிறப்பிலே நரம்புத்தளர்ச்சி இருந்ததால், அவனுக்கு அது மறுக்கப்பட்டுக் கொண்டு வந்தது. அவனால் அதை லாவகமாக செய்ய முடியவில்லை.

அந்த நரம்புத்தளர்ச்சிக்கு காரணம் அவன் பாட்டிதான் என அடித்துச் சொல்லுவான்.அவன் அம்மாவுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. இந்த நிலையில் அவன் வீட்டாரும் அடுத்த கல்யாணம், சொத்து பிரிப்பு, வியாபார நஷ்டம் என சிறிது நொடித்து விட்டார்கள். அதனால் அவன் பாட்டி எப்போதும் அம்மாவை திட்டிக் கொண்டே இருப்பார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் மாமியார் திட்டினால் மருமகள் என்ன செய்ய முடியும்? ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் தள்ளி வைத்து விட்டு அவன் அப்பாவிற்கு வேறு திருமணம் செய்ய முடிவெடுத்தார் அவன் பாட்டி. அவர் நல்ல  பணியில் அவர் இருந்ததால் நேக்காகச் செய்ய வேண்டும் என அவர்கள் யோசித்தார்கள். சரியாக அந்த நிலைமையில் தான் இவன் பிறந்தாக சொல்லுவான்.



சிறு வயதில் அவனுக்கு முதலில் பேச்சே சரியாக வரவில்லை. திக்கித் திக்கித்தான் பேசுவான். எல்லாக் குழந்தைகளுமே அவனை கிண்டல் செய்வார்கள். 

அவன் அம்மா அடைந்த வேதனைகளுக்கெல்லாம் உச்சமாக அவன் அப்பா ஒரு விபத்தில் திடீரென இறந்து போனார். வீடே அவரை கரித்துக் கொட்ட தொடங்கியது. வாரிசு அடிப்படையில், அவருக்கு  வேலை கிடைக்க,  அவர் ஒரு தனி வீட்டுக்கு குடி போனார். அப்போது அவன் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான். அடிக்கடி நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்படுவதாலும், திக்கு வாயாலும் பலரின் கேலிக்கு உள்ளானான். அதனால் கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டான்.

அவன் தன் அம்மாவுக்கு சமையலில் உதவுவது, கடைக்குப் போவது, பாத்திரம் விளக்குவது, துவைப்பது என எல்லா வேலைகளும் செய்வான். அவர் வேலை முடிந்து திரும்பும்போது டீயோடு நிற்பான். நான் தான் பொறுக்க மாட்டாமல் என் நண்பனின் சிறிய நகைக்கடையில் கேஷியர் மற்றும் கணக்கெழுதும் வேலைக்குச் சேர்த்து விட்டேன். பணி நேரம் போகவும் வீட்டு வேலைகள் எல்லாம் செய்வான். டிசம்பர் மாதம் பெரும்பாலும் கோவில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வான். ஒவ்வொறு ஆண்டும் தூபப்பேழையை எதிர்பார்ப்பான். ஆனால் அது நிராசை என்று அவனுக்கும் தெரியும்

நாட்கள் ஓடியது. எனக்கு சென்னையில்  வேலை கிடைத்தது.. ஒரு நாள் அவனை பார்க்க அவன் சமைத்து கொண்டிருந்தான். இவனுக்கு ஒரு கல்யாணம் என ஆரம்பித்தார் என்று அவன் அம்மா ஆரம்பித்தார்.

உடனே  திக்கியவாறே அதை ஆவேசமாக மறுத்தான். திருமணம் வேண்டாம் என்று  நாசூக்காய் சொன்னான். அவர் உடைந்து அழத் தொடங்கினார். இவன் மனசு யாருக்கும் வராதுடா என்றார்.

அவன்  நான்கு வயதாய் இருக்கும் போது, பாட்டி பெருங்கோபத்தில் எதற்கோ கத்திக்கொண்டே இருந்தாராம்.  சுவரோரம் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டேயிருந்தாராம். இவன் அவரின் சேலையைப் பிடித்துக் கொண்டே ஒட்டி நின்று கண்கலங்கிக் கொண்டே இருந்தானாம். பாட்டி போனவுடன், திக்கியவாறே “ அம்மா, அழாதம்மா, நீ முறுக்கு சுட்டுக் கொடு நான் தெருவில போயி வித்து நிறைய காசு கொண்டு வாரேன், அழாதம்மா” என ஆறுதல் படுத்தினானாம். அந்த ஆறுதல்தான் நான் உயிரோடு இருப்பதற்கே காரணம் எனச் சொன்னார்கள்

நான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இவன் இங்கேயே இருந்தா மனசு கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பான், எனக்குத் தெரிஞ்ச பள்ளி கூட ஹாஸ்டல் லா, ஒரு  மெஸ் Incharge தேவைபடுது என்று. அதனால் திருச்சில கொஞ்சநாள் இவன் இருக்கட்டும் எனச் சொல்லி அங்கு வேலைக்குச் சேர்த்துவிட்டேன். நம்பிக்கைக்குரிய ஆள் என்பதால் அவர், அவனை சூப்பர்வைசர் ஆக்கிக் கொண்டார்.

சில மாதங்களிலேயே அந்த பள்ளி அருட்சகோதரர் டேய் நல்ல பையன்பா, நம்பி விட்டுட்டுப்போக முடியுது என்று சொல்ல எனக்கு மகிழ்ச்சி. மாதம் ஒருமுறை அவன் அம்மாவிற்கு சேலை முதல் செருப்பு வரை, மிக்ஸர் முதல் மருந்து வரை வாங்கிக் கொண்டுபோய் பார்த்து விட்டு வருவான். ஒரு முறை நான் அவனைப் பார்க்க பள்ளிக்கு போன போது பையன்களுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தான். என்னடா இதெல்லாம் செய்யுற எனத் தனியே கேட்டதற்கு, இவங்கல்லாம் ஸ்போர்ட்ஸ் பசங்கடா, லேட்டா சாப்பிட வருவாங்க. சர்வர்களும் டயர்டாகி இருப்பாங்க, அதான் என்றான்.

அதன்பின் அந்த ஹாஸ்டல் மெஸ் காண்ட்ராக்ட் மூன்று முறை மாறியது.ஒரு முறை பள்ளி வேறு Congregation சென்றது. ஆனால் மாறாத, மாற்றாத ஒரு ஆள் அவன் மட்டும். எல்லோருக்கும் அவன் மேல் அப்படி ஒரு நம்பிக்கை.

மாணவர்கள் யாருக்காவது காய்ச்சல் என்றால் கஞ்சி வைத்துக் கொடுப்பானாம். ஸ்டோரில் இருந்து அத்தியாவசிய மாத்திரைகளை வாங்கி வைத்து அகால வேளைகளில் யாருக்காவது முடியவில்லை என்றால் கைவைத்தியம் பார்ப்பானாம்.

ஒரு தடவை அவன் அம்மாவை பார்க்க சென்றிருந்தேன். அவனை பற்றிய கவலை அவரை அரித்துக் கொண்டிருந்தது. அவ்ர்களிடம் “அவனை என் உடன் பிறாவா அண்ணன்னு வச்சுகோங்க ” நான் அவனைப் பார்த்துக்கிறேன் என உறுதி அளித்தேன். அவர் என்னிடம் “ என் குடும்பத்தாரின் எல்லாப் பாசத்தையும் இவன் ஒத்த ஆளா என் மேல காமிச்சிருக்கான். வீட்டு வாசப்படி இறங்க விடாம அப்ப இருந்து இப்ப வசதி பன்ணி வச்சிருக்கான்.



அதன்பின் அவனிடம்  பின் வாரம் ஒருமுறையாவது பேசி விடுவேன். Whatsapp ல் தினம் ஒரு முறையாவது ஒரு Hi. அவன் என்னிடம் கூறுவது பெரிய ஆசையெல்லாம் ஒண்ணுமில்ல டா, ஒரு தடவையாச்சும் திருப்பலிக்கு நடுவுல நம்ம ஊருல இருக்க தூபப்பேழையா காமிக்கனும் டா, அப்புடின்னு சிரிப்பான்.

திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, அவன்  இறந்து விட்டதாக தகவல் வந்தது. ஊரில் இருந்த நண்பனுக்கு க்கு போன் செய்து ” விபரத்தைச் சொல்லி டேய், கோவில்ல இருந்து எப்புடியாச்சும் பழைய தூபப்பேழைய எடுத்துட்டு வாடா, சாமியார் டா  நான் பேசிக்கிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினேன். ஹாஸ்டலை நெருங்க நெருங்க ஏராளமான கூட்டம் இருந்தது. அலங்காரத் தேர், வெடி, மாலை என பலமான ஏற்பாடுகள். படுக்க வைக்கப்பட்டிருந்த Freezer Box கிட்ட தூபப்பேழையில் தாசங்க சாம்பிராணியயை போட்டு புகையவிட்டு, அப்போதைய அருட்சகோதரரை அணுகினேன்.

எனக்கு ஆறு மாசமாத்தாங்க பழக்கம். இவர் இறந்த உடனே பசங்க வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டு விட்டிருக்காங்க. 10 வருசமா இந்த ஹாஸ்டல்ல இருந்த பையங்கள்ளாம் முடிஞ்ச அளவுக்கு வந்துட்டாங்க. வெளிநாட்டு பசங்கள்ளாம் அவங்க சொந்தம்,பிரண்ட்ஸ் மூலமா வேட்டி, மாலை.காசுன்னு கொடுத்து விட்டிருக்காங்க. சர்வரா இருந்த பழைய ஆளுங்க,ஸ்வீப்பர்ஸ்னு எல்லாம் கேள்விப்பட்டு வந்துட்டாங்க. பழைய ஆசிரியர் கூட நிறைய வந்துட்டாங்கப்பா. காலையில Provincial Superior வந்து மரியாதை செஞ்சுட்டு நல்ல படியா திருப்பலி வச்சிட்டு இங்கயே அடக்கம் பண்ண சொல்லிட்டுப் போயிட்டாருங்க என்றார்.

யார் மனசும் கோணாம நல்லது செஞ்சிருக்கார்ப்பா, தங்கமான மனுஷன் என்றார், அடக்கம் முடிந்து ஹாஸ்டலுக்கு திரும்பினோம். ஏராளமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே ஒரு வெண் தசாங்க புகையின் வாசனை என்னை பார்த்து சிரித்தது.


Thanks
Heavily Inspired and Plagiarised from @teakkadai (Muralikannan Sir) Twilonger

Comments

  1. This is wonderful and awesome. You can write and publish books with your skills.

    ReplyDelete

Post a Comment