இரட்சிப்பின் முத்தம்
வழக்கமாக மதுரை வரும் நாட்களில் ஏதாவது மிக சந்தோஷ தருணத்தில் ஒருமுறையேனும் பீர் அருந்தும் பழக்கம் இருந்தது.
இந்த தடவை Easter விடுமுறைக்கு க்கு வந்தேன் எங்கள் ஏரியாவின் அருகிலையே Golden Club, A1, மல்லிகை, Heritage பார் வசதியுடன் கூடிய மதுக்கடைகள் இருந்தாலும் அங்கு அவ்வளவாக செல்வதில்லை. சித்தப்பா, மாமா, தாத்தா என யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வந்துவிடுவர்.
அது நம் செளகரியத்தை கெடுக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு அசெளகரியத்தை அளித்து விடும். அதனால் நகரத்திற்குள் இருக்கும் பழக்கப்பட்ட ஹோட்டலுக்கு சென்றுவிடுவேன். நண்பன் ஜோதி, பாலாவுடன் அண்ணா நிலையம் அருகிலோ அல்லது அத்தானுடன் பெரியார் நிலையம் அருகில் Hotel Tamilnadu சென்றுவிடுவேன். தரைத்தளத்தில் உணவகமும், முதல் தளத்தில் குளிரூட்டப்பட்ட மதுக்கூடமும்.
இநத தடவை அத்தானுடன் என்பதால் Hotel Tamilnadu. வழக்கம்போல் வண்டியை கீழ்தள நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு.இருவரும் வெளியே சென்று கொஞ்சம் பருப்பு வடை வாங்கி வந்தோம் அங்கு தரும் ரசத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். இவர் என் அத்தான், எங்களுக்கு முந்தைய தலைமுறை. அத்தான் என்று கூட சொல்லமுடியாது எங்கள் வழிகாட்டி சிறுவயது முதலே More than a Relative.
கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களையும் அலசி இருக்கிறோம் அர்ஜுன் ரெட்டி 534 தடவை கதை முதல் அதிபர் Trump வரை பேசாத விஷயங்கள் இல்லை. Fallopian Tube முதல் Fidel Castro வரை கூறு போட்டு கும்மி அடித்திருக்கிறோம்.
அத்தானுடன் என் நண்பர்களுக்கும் அவர் அத்தான். வடையை வாங்கிவிட்டு ஹோட்டலை அடைந்தால்.
முருகன் அண்ணன் வழக்கம்போல் புன்னகைத்து நலம்விசாரித்து கதவை திறந்து விட்டார். அவர்முகம் வழக்கத்தைவிட பிரகாசமாய் இருந்தது. அத்தாணை மேலே போக சொல்லிவிட்டு மீண்டும் கதவருகில் வந்து முருகனை கேட்டேன். என்ன இத்தனை பிரகாசமென, "பிள்ளைக்கு பிறந்தநாள் தம்பி, வேற ஒன்னுமில்ல" என்றார்
"வாழ்த்துக்கள் சொல்லிடுங்க பாப்பாக்கு" என கூறிவிட்டு ஒரு சிறு தொகையை கையில் திணித்து பாப்பாக்கு ஏதேனும் என்சார்பாய் பரிசு வாங்கி கொள்ளுங்கள் எனக்கூற, அண்ணன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "இப்போ வேணாம் தம்பி, போகும்போது குடுங்க, வாங்கிக்கிறேன்" என்றார்.. சம்மதித்து உள்சென்றேன். இந்த Tips கொடுக்கும் பழக்கமே அத்தானிடம் கற்றுகொண்டது தான்.
தரைத்தளத்தில் ஆங்காங்கே மேஜைகளில் சிலர் அமர்ந்திருந்தனர்.. அவர்களை கடந்து சென்று தான் முதல்தளத்திற்கு படியேற வேண்டும்.. நடந்து செல்கையில் இடப்புறமாக ஒரு மேஜையிலிருந்து பழக்கப்பட்ட சிரிப்புச்சத்தம். எதேச்சையாக திரும்ப அனு அமர்ந்திருந்தாள், என் பள்ளி தோழி இன்று வரை தொடரும் நட்பு அடிக்கடி சண்டை போடுபவள் நான் பார்த்த அடுத்த கணமே அவளும் என்னை
பார்த்துவிட்டாள். அப்படியொரு ஆச்சரியம் அவள் முகத்தில், சட்டனெ சிரித்து என்னை பார்த்து கையை தூக்கியவள், அவளுக்கு எதிரில் அமர்ந்திருப்பவளை பார்த்ததும் முகம்மாறி கையை இறக்கினாள்.
சட்டென ஒரு அமைதி பரவியது. அனுவிற்கு எதிரில், எனக்கு முன்பாக, அமர்ந்திருப்பது யார். அவளே தான்..
என்னவள்.. இல்லை, பழைய என்னவள்.. மெல்ல திரும்பினாள், அவளேதான்.. மொத்த உலகமும் இயக்கத்தை நிறுத்தியது போல் அசையாமல் நின்றிருந்தேன். அந்த பழைய குழந்தைமுகம் இல்லை, நெற்றியில் சிறிதாய் குங்குமம், செந்தூர நிறத்திலேயே சுடிதார் அணிந்திருந்தாள்.. மதுரை மீனாட்சியை விட மூன்றுமடங்கு பிரகாசமாய்
இருந்தது இவள்முகம். சிலையென நின்றவனை, அங்கிருந்தவேறே குட்டிக்கைகளை அசைத்தாள்..
அதற்கு மேல் மூச்சுவிட இயலவில்லை அந்த அமைதியில். சட்டென திரும்பி நடந்து பின்புறமாக இருந்த வாசலில் வெளியேறினேன். வடை வேறு என்னிடம் இருக்கிறது
அத்தான் வேறு முதல் தளத்தில் இருக்கிறார். முதல்தளத்திற்கே சென்றுவிடுவோம் என கதவருகே செல்ல, கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள். நான்கு படிகளுக்கு கீழே நான் நின்றவாறே, அன்னார்ந்து பார்க்கிறேன். அந்த மாலை நேர மஞ்சள் வெளிச்சத்தில் அக்கினி கொழுந்தை போல, செந்தூர உடையில், கிட்டத்தட்ட தேவதை தான்.
தேவதை தானே அவள்
மெல்ல படியிறங்கி வந்தாள். "கிட்டத்தட்ட ஏழு வருசம் இருக்கும்ல பாத்து" என சாதாரணமாக ஆரம்பித்தாள், ஆமாமென தலையை மட்டும் ஆட்டினேன். அருகில் இருந்த நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு அமர்ந்துகொண்டாள். நான் எதிரிலையே நின்றுகொண்டிருந்தேன்..
"எங்கு இருக்கிறாய், என்ன செய்கிறாய், வேலை பிடித்திருக்குதா" என
ஒவ்வொன்றாக ஐந்து நிமிடங்களுக்கு மேலாக கேட்டுக்கொண்டே இருந்தாள், தலையை அசைத்தவாறு ஆம் இல்லையென மட்டும் பதிலளித்தவாறு அந்த பிரகாசிக்கும் முகத்தில் மூழ்கியிருந்தேன்.
இறுதியாக கேட்டாள் "உனக்கு என்னிடம் கேட்க எதுவுமே இல்லையா". தழுதழுத்த குரலில் "சந்தோசமா இருக்கியா?" என கேட்டேன்
என்ன நினைத்தாளோ தெரியவில்லை,
அருகில் அழைத்தாள்.. முன் சென்று நின்றேன். கையை பிடித்து கீழ்நோக்கி இழுத்தாள்.. இடது முழங்காலை மடக்கி தரையில் முட்டியிட்டு அவள் முகத்திற்கு நேராக நின்றேன்.. கிட்டத்தட்ட தேவாலைய அருட்தந்தையிடம் பாவமன்னிப்பு வாங்கும் சிறுவன்போல அமர்ந்திருந்தேன். இடதுகையால்
என் வலது காதை மெல்ல பிடித்தவள் மெல்ல காதை திருகிகொன்டே, என் கண்களுக்குள் ஊடுருவி
"நான் சந்தோசமா தான் இருக்கிறேன். நீ நல்லா இருக்க ன்னு தெரியுறப்போ இன்னும் சந்தோசமா இருப்பேன்.. என்றாள் யட்சி" என முடித்து என் தலையை இருகையால் பிடித்து உச்சியில் முத்தம் பதித்து எழுந்து சென்றுவிட்டாள்....
இது பாவமன்னிப்பு அல்ல.. இரட்சிப்பு.. எனக்கான அவளின் ஆசீ...
அவள் எழுந்து நடந்த பின்பும் அந்த வெற்று நாற்காலியை பிடித்தவேறே அழுதபடி, துக்கத்திலிருந்து விழிக்கிறேன்..
இந்த மாலை இப்படியா இருக்க வேண்டும்..
அத்தான் என்னை அழைக்கிறார்
அலைபேசியில்
நான் படியேறுகிறேன்
அவள் என்னிடமிருந்து
உயிர்க்க தொடங்கினாள்.
*எதிர்நோக்கா*
*கோடைக்கால*
*புதுமழையென*
*என் மருதத்தை*
*குளிர்வித்து,*
*முன்*
*யாதுமாகிப் பின்*
*யாரோவாகியிருக்கும்*
*இவளென்,*
*இன்ப*
*இலக்கணப்பிழை...*
Thanks
@படிப்பகத்தான் Tweets
Comments
Post a Comment