மனிதம் மட்டுமே புனிதம்.


ஒரு நாள் உயிரியும்,
ஒரு செல் உயிரியும்,
ஓரறிவு உயிரனமும்..,
ஆறறிவு உயிரினமும்
அதன் போக்கில் பல பாடங்களை
கற்பித்துவிட்டு தான் போகின்றன.
ஆறறிவு மனிதனின்
அற்ப மனம் தான்
அதை உணருவதில்லை..!

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையிலான இந்த குறுகிய காலம்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.
ஓர் மழையின் இரவில் எங்கள் ஊரின் வீட்டுத்திண்ணையின் விளக்கொளியை தின்றுகொண்டிருந்தன  ஈசல்களும் மாமழைக்கும் வரும் பூச்சிகளும் நான் அவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டே,

ஏன் இவை விளக்கை முற்றுகையிட்டு துள்ளிக்குதிக்கின்றன என யோசிக்கும் போது, விளக்கொளி அவைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஊர் திருவிழா காலங்களில் வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கோவில் கோபுரத்தை இரவுமுழுவதும் அடம்பிடித்து நாம் எப்படி ரசிப்போமோ,
அதுபோலவே இந்த மழைக்கால  ஈசல்களும். விளக்கை அணைக்காமல்  பாவம் அவைகளும் ரசிக்கட்டுமேயென விளக்கை அணைக்க வேண்டாமென படுத்துவிட்டேன்..

காலையில் எழுந்து திண்ணையில் ஓடிவந்து பார்த்ததும் உறைந்துவிட்டேன். இரவுமுழுவதும் விளக்கொளியில் ஆடித்திரிந்த அத்தனைபூச்சிகளும் மரணித்திருந்தன.
கண்கள்கலங்க.

அணைந்து கிடந்த விளக்கின் அணைத்த காரணத்தினாலேயே, இந்த பூச்சிகள் மரணமடைந்தது. இத்துணை ஆயிரக்கணக்கான மரணத்திற்கும் காரணம் என் அலட்சியமென என்மேல் எனக்கே ஒரு  கொலைக்குற்ற உணர்வு ,  ஆனால் இவை ஈசலெனும்  மழைப்பூச்சிகள். ஒருநாள் மட்டுமே உயிர்வாழக் கூடியவை என என்னை நானே தேற்றிக் கொண்டேன்

மழையின் நாளில் பிறந்து இரவு விளக்கொளியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்துவிட்டு மறுநாள் காலையிலே இறந்துவிடும் என்று.

என்ன? ஒருநாள் மட்டும் உயிர் வாழுமா. ஒருநாள் என்பது ஒரு உயிரினத்தின் ஆயுட்காலமா. ஒருநாளில் இவைகளுக்கு எப்படி முதுமை வந்திருக்கும். காலையில் இறந்துவிடுவது இவைகளுக்கு தெரியுமா.

தெரிந்துதான் இரவில் இத்தனை ஆடலும் பாடலுமா.. 

அந்த  காரணம் எனக்கு இன்றும் திருப்தியளிக்கவில்லை, யார் இவைகளின் ஆயுட்காலத்தை முடிவு செய்தது. அறுபது, எழுபது ஆண்டுகள் வாழ்கிறோமே நாம். இவைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஆயுட்காலம் அளித்திருக்கலாமே..

இல்லை அவைகளின் உலகில் அந்த ஒரு நாள் அறுபது ஆண்டுகளுக்கு சமமானதாய் இருக்குமா.. கிங் நோய் தடுப்பு நிலையத்தில் விரிந்திருக்கும் ஆலமரம் 85ஆண்டுகள் பழையமையானதென்றும், அடையாறி Theosophical Society  ல் இருக்கும் ஆலமரம் 450 ஆண்டுகள் பழமையானது அந்த  ஆலமரம் நம்மையும் இந்த மழைப்பூச்சியை பார்ப்பது போல்தானே பார்த்திருக்கும்..

கோடிகளில் வயதுடைய இந்த பூமி நம்மை ஈசல் அளவுக்கு கூட நினைத்திருக்காதல்லவா... நாமும் பூச்சியைப்போல் ஒரு உயிரினம் தானே.. ஆடையணிந்த விலங்கினம் அவ்வளவே.. சொல்லப்போனால் விலங்குகளை விட மிக மகா சல்லித்தனமான  மட்டமான விலங்கினம்.. ஆன்மாவை சுமந்து திரியும் ஒரு மாமிச ஊடகமே இந்த உடல். இஞ்ஞாசியார் சொல்வது போல "உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன"

உயிரை எடுத்துவிட்டால் கறிக்கடையில் தோங்கும் வெற்று மாமிசம் தான் இந்த உடல்.. பிறக்கும் போது இல்லாத ஆசையும், ஆணவமும்
இறக்கும் போது கொண்டுசெல்ல இயலாத பணமும் பொருளும் தான் மொத்த வாழ்க்கை ஓட்டம் முழுவதும் நிறைந்திருக்கிறதல்லவா.. உங்களை அறியாமலே தூக்கத்தில் உங்கள் உயிர் பிரியுமாயின்,

சேர்த்து வைத்த உங்கள் ஆசையும், அதிகாரமும், பணமும், பொருளும் எங்கு செல்லும்.. உங்கள் ஆன்மா என்னவாகும்.. உடலை எரிக்கவோ, புதைக்கவோ, சிதைக்கவோ, இல்லையேல் கழுகுகளுக்கு உணவாகவோ விட்டுவிடுங்கள்.. உடலை விட்டு பிரிந்த நீங்கள் எங்கு செல்வீர்கள்..

மரணம் என்ற ஒன்றை மனதார நேசிப்பவனின் மனநிலை ஊற்றுநிரைப்போல தெளிவாக இருக்கும்.. அவனுக்கு தெரியும் எதுவும் நிரந்தரமில்லையென.. அதற்கு மாற்றானவர்களே சாதாரண மனிதர்கள் என்று அழைக்கப்படும் நீங்களும் நானும்.. ஆளத்துடிக்கும் விலங்குகள் சக விலங்குகளை

அடிமையாக்க கட்டமைத்த பிம்பங்களே கடவுள், மதம், சாதி, திருமணம் எல்லாமும்.. யார் கடவுள்.. பசித்தவனுக்கு உணவளிக்கும் ஒருவனை விடவா கடவுள் உயர்ந்தவன், பார்வையற்ற ஒருவனை கரம்பிடித்து சாலையை கடக்க உதவும் ஒருவனை விடவா கடவுள் உயர்ந்தவன்.. மனிதம் உடைய ஒரு தனி மனிதனை விடவா கடவுள் உயர்ந்தவன்..

கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும்  சகமனிதனை நசுக்கி பிழிபவன், அந்த ஓர்நாள் ஈசலைவிடவும் மோசமான மனநிலை கொண்டவனாகத்தானே இருக்க வேண்டும்.
மண்புழு மேயுப்போகும் உடலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். பிணந்திண்ணிகழுகின் உணவுக்குள் ஒளிந்திருக்கிறாய். நாள்வரும், மரணம் எனும் மகத்தான நாள்வரும்.
.
வாழ்ந்த இந்த மோசமான வாழ்க்கையை நினைத்து வருந்தி அழக்கூட நேரமளிக்காத அந்த மகத்தான மரணம் வரும்.

அதற்கு முன்பேனும் சற்று மனிதன் போல் வாழ்..
சக மனிதனிடம் பேணும் மனிதம் மட்டுமே புனிதம்..
மனிதம் மேல் உண்டாக்கும் நம்பிக்கை தான் கடவுள்..
யாருக்காகவோ, யோரோ ஒருவருடைய லாபத்திற்காகவோ வாழும் இந்த மிருக வாழ்க்கையை விடுத்து மனிதனாகு.

 மனிதம் மட்டுமே புனிதம்.

Thanks 
@Frompadipadam1 Tweets
https://bit.ly/3BjNbrm

Comments