அவள் என் திகட்டா தேன் மிட்டாய்


மாலையில் விறுநடைபோட்டு முடக்குசாலையில் இருந்து  வீட்டிற்கு செல்லும் வழியில் எனக்கு முன்னால் சென்றவள் Afilas அம்மா வடை கடை அருகே நின்று  பெயர்சொல்லி கத்தியழைத்தாள். நடையின் வேகத்தை மட்டும் குறைத்தேன். திரும்பிக்கூட பார்க்கவில்லை நான். ஏனெனில் அழைத்தது அவளென அறிவேன். இன்னும் நான்கைந்து நொடிப்பொழுதில் ஓடிவந்து எதிரில் நின்று என்னை கொன்று விழுங்கப்போகிறாள் ராட்சசி.


அன்று ஒரு விஷேசமான சனிக்கிழமை, காலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு தயாராகும்போதே ஏதோ ஒரு பதற்றமும் ஒட்டிக்கொண்டது.. காரணம் காதலர் தினம்.. இதைவிட சரியான நாள் இனி அமையப்போவதில்லை.. நண்பர்கள் கூறினாலும், ஒட்டுமொத்த கல்லூரியேயே கிசிகிசுத்தாலும் நான் இதுவரை அவளிடம் காதலை கூறியதில்லை..

 
இந்த காதலர் தினத்தில் அதிகாரப்பூர்வமாக அவளிடம் தெரிவித்து விடவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டேன். முடிவுகள் சாதகமாய் அமைய கல்லூரிக்குக்கு வரும் வழியிலே வழக்கத்திற்கு மாறாய் பாஸ்டின் நகர் ஆலய மாதா கெபியில் நின்று வேண்டிக்கொண்டேன்.. போதாக்குறைக்கு உண்டியலில் இருவது ருபாய் லஞ்சம் வேறு..

ஒருவழியாக கல்லூரி வந்து சேர்ந்துவிட்டேன், ஆனால் யோசனை இன்னமும் முடியவில்லை.. எவ்வாறு இவளிடம் தெரியப்படுத்துவது.. இவளைவிட ஆபத்து இவளுடன் அதே இருக்கையில் இருக்கும் நண்பிகள் மூவரும்..
ஆம் 16 எண் பேருந்தின் முப்பெரும் தேவிகள் மூவருக்கும் தெரியாமல் காதலை தெரிவிக்க வேண்டும்.. அவர்கள் இருக்கட்டும், இவளின் பதில் எங்கனம் இருக்கும்
சிரிப்பாளா முறைப்பாளா,
கத்தி அழுதுவிடுவாளா இல்லை
HOD அறையில் கட்டி தொங்கவிடுவாளா. 
இல்லை இல்லை.
விவரம் தெரிந்ததிலிருந்தே நன்கு தெரியும், ஒரே ஏரியா, ஒரே கோவில், First Year ல இருந்து பழக்கம்  எல்லாவற்றிற்கும் மேலாக "என்னோட ராட்சசி" அப்படியெல்லாம் அடிவாங்கி தரமாட்டாள்.
என எனக்குநானே கேள்வியும் பதிலுமாய் குழப்பிக்கொண்டிருக்க, யார்யாரோ வந்து வகுப்பு நடத்தி முடித்திருக்க, அன்று கல்லூரி முடிந்தது எனக்கு அன்று Fluid Mechanics லெப் என்பதால் சீக்கிரம் வந்துவிட்டேன் கேண்டீன் வந்தேன் ..என் பின்னால் வந்தவள் வந்து தலையைக் கொட்டி "காலையிலிருந்தே திருட்டு முழி, சரியில்லையே நீ.. முதலில் போய் கேண்டிண் ல டீ குடிச்சுட்டு பஸ்க்கு வா" என கூறிவிட்டு
பக்கத்தில் காத்திருக்கும் முப்பெரும் தேவியுடன் Girls Canteen Section சென்றுவிட்டாள்.  வழக்கம்போல் யாருமில்லாத கேண்டினில் பாதியளவு டீ குடித்த நிலையில், திடீரென மூளைப்பகுதியில் விளக்கு எரிந்தது.. கையை கழுவிவிட்டு பாதி டீயுடன் எழுந்து.. பாக்கெட், பை
அத்தனையிலும் இருந்த காசை கடகடவென திரட்டினேன்.. மொத்தமாக தொன்னுறு ருபாய் தேறியது.. குடுகுடுவென ஓடி கல்லூரியின் உள்ளே அமைந்திருந்த Stationary கடையை அடைந்தேன்.. ஒன்பது Dairy Milk Hearts  சாக்லேட் .. கண்ணாடி போன்ற கவரில் இதய வடிவில், உட்புறம் வெள்ளி நிற கவரில் கூடிய உயர்ரக பத்து ருபாய் ஹார்டின் சாக்லேட்
(காலம்காலமாக கல்லூரியில் நடக்கும் சம்பிரதாயம் இது. கல்லூரியில் இருக்கும் பாய் அண்ணன் பெட்டிக்கடையில் இருந்து Dairy Milk சாக்லேட் வாங்கி பிடித்த பெண்ணிற்கு கொடுத்துவிடுவர். அந்த பெண் அமைதியாக வாங்கி மிட்டாயை சுவைத்து விட்டால் காதல் சக்சஸ். இல்லையெனில் கல்லூரி மட்டுமல்ல, வீடு வரை கலவரம் தான்..)

 
இரண்டு கையிலும் வாங்கி பாக்கெட்டை நிறைத்து விட்டு, வந்த வேகத்தில் ஓடி பேருந்தை அடைந்தேன்.. இன்னும் ஐந்தே நிமிடத்தில் இவள் வந்துவிடுவாள், பத்து நிமிடத்தில் மொத்த பேருந்தும் கூடிவிடும்.. அதற்குள் செயலை முடித்தாக வேண்டும்.. முப்பெரும் தேவிகள் எங்கள் 16 பேருந்தின் தேவதைகள் என மூவரின் புத்தகப்பைகளை
தேடி கண்டுபிடித்து மேல் பையில் இரண்டு Dairy Milk Hearts வீதம் ஆறு சாக்லேட் போட்டுவிட்டேன்.. பின் இராட்சசியின் புத்தகப்பையில் மூன்று மிட்டாயை போட்டுவிட்டு பேருந்தைவிட்டு வெளியில் வந்து வழக்கம்போல் அமரும் தடித்த அரசமரதடியில் வந்துவிட்டேன்.. முப்பெரும் தேவிகள் 
மூவரும், என் வகுப்பு நண்பர்களால் ஒருதலையாக காதலிக்கப் படுபவர்கள். அது மூவருக்கும் ஏற்கனவே நன்கு தெரியும். எதற்காக இந்த ஏற்பாடெனில், ஒருவேளை என் இராட்சசி  சாக்லேட் கண்டு அதிர்ச்சியாகி, ஆக்ரோஷமாகி பேருந்தில் வரும் ஆசிரியரிடம்  சென்றுவிட்டால், அடிவாங்க கூடவே ஆள் வேண்டுமல்லவா. அதற்காக இந்த முன்னேற்பாடு.. அதுவும் இல்லாமல் என் Fludid Mechanics மற்றும் Strength of Materials ஆசிரியர்கள் என்னருகில் அமருவர்கள்.
கல்லூரி முடிந்த் நண்பர்கள் ஒவ்வொருவராக வர துவங்கியிருந்தனர்..  பேருந்து கிளம்ப ஆரம்பமானது.. கன்னிவெடியில் கால் வைத்ததைப்போல் இதயம் படபடவென வெடித்து அடித்துக்கொண்டிருந்தது.. பத்து பதினைந்து நிமிடத்தில் மெதுவாக ஒரு அழுகுரலில், முதல் தேவி...
"சார், என் பேக் குள்ள யாரோ Dairy Milk
மிட்டாய் போட்டுட்டாங்க" ன்னு.. ஆமாம், 2010 காதலர் தினத்தில் எனது கல்லூரியில் இது ஒரு கொலை குற்றத்திற்கு சமமான நிகழ்வு.. அவள் அழ ஆரம்பித்ததும் அனைவரும் அவரவர் புத்தகப்பையை ஆராய ஆரம்பித்தனர்.. "இயேசுவே, எனக்கு பின்புறமிருந்து மட்டும் அழுகை சத்தம் வரக்கூடாது, வேண்டுமானால் இன்னமும்
இரண்டு ருபாய் காணிக்கை தருகிறேன்" என கடவுளிடம் பேருந்தில் இருந்தவாறே கைகள் நடுங்க டீலிங் பேசிக்கொண்டிருந்தேன்.. அடுத்த நிமிடமே "சார்ர்ர்ர்" என அடுத்த சத்தம்.. இம்முறை இரண்டாம் தேவி மற்றும் மூன்றாம் தேவிகள் முதுகுப்புறமிருந்து எந்த சத்தமும் இல்லை.. இயேவுக்கு புகழ் வேறு யார் பையிலும் இருக்கிறதாவென ஆசிரியர்
கேட்டும் எந்த பதிலும் இல்லை..
சிபிபிபி விசாரணை ஆரம்பித்தது..
யார்மேலேனும் சந்தேகமா என மூவரையும் ஆசிரியர் விசாரிக்க, சந்தேகமே இல்லை இவன்தான் என மூவரும் அவர்களது ஒருதலைக் காதலர்களை கைகாட்டினர்.. நண்பர்கள் மூவரையும் விசாரணைக்கு HOD அறைக்கு அழைத்துச்சென்று நாளை பெற்றோருடன்
வரச்சொல்லி விடுவித்து விட்டனர்.. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை பின்னால் திரும்பி இவளை பார்க்கும் நான், கா ரி யா பட்டி யிலிருந்து முடக்குசாலை வரை திரும்பவில்லை.. முடக்குசாலை, பையை தூக்கி தோளில் மாட்டிவிட்டு நடக்கத் துவங்கிவிட்டேன்.. முதலில் அம்மாவிடம் சொல்லி
நாளைக்கு கரிமேடு அந்தொணியார் கோவிலுக்கு சென்று நன்றி திருப்பலி ஒன்று ஒப்புகொடுக்க வேண்டும் என விறுநடைபோட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் பெயர்சொல்லி கத்தியழைத்தாள்.. நடையின் வேகத்தை மட்டுமே குறைத்தேன். திரும்பிக்கூட பார்க்கவில்லை நான்.. ஏனெனில் அழைத்தது அவளென அறிவேன்..
 இன்னும் நான்கைந்து நொடிப்பொழுதில் எதிரில் வந்து நிற்பாள்..
அவளேதான், அந்த வெள்ளிக் கொலுசொலி அதிர குடுகுடுவென ஓடிவந்தாள்.. மெதுநடையில் இருந்த என்னை சாலையில் புத்தகப்பையை பிடித்து இழுத்து நிறுத்தினாள்.. மூச்சுவாங்க அவள் குட்டிக்கையை விரித்தாள், இரண்டு Dairy Milk Hearts மிட்டாய் வைத்திருந்தாள்.. நான் நிமிர்ந்து அவள் முகம்பார்க்க, சிரித்தவாறே கூறினாள்;
"ஒன்னு அப்பவே சாப்பிடுட்டேன்..
இரண்டு இருக்கு.. ஒன்னு உனக்கு,
இன்னொன்னு எனக்கு" ன்னு...

(நான் சொல்லல "என்னோட இராட்சசி " அவள்)

சிரித்தவள் நறுக்கென தலையில் கொட்டிக் கேட்டாள் "ஏண்டா, அவங்க பேக்ல போட்ட ஸ்வீட் லாம் சேர்த்து எனக்கே தந்திருக்கலாம்ல. இந்த ஸ்வீட் அவ்ளோ நல்லாருக்கு" ன்னு...

கடைசியாக கல்லூரிக்கு சென்றபொழுது
Departmental Store ஆக மாறியிருந்த அந்த காலேஜ் 
Stationary கடையில் அவ்வளவு தேடியும் அந்த Dairy Milk Hearts மிட்டாய் கிடைக்கவில்லை..
சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த கல்லூரிக்குக்குள் நெடுநெரமாய் அலைந்து திரிந்தும் "என்னோட இராட்சசியையும்"  காணவேயில்லை....


Thanks
@Frompadipagam tweets
https://twitter.com/Frompadippaham1/status/1288343356360269825?s=19


Comments