சிலுவையில் அறையப்படாத கர்த்தன். - கவிதை
துன்பம்
நேர்கையில்
யாழெடுத்து
யாரும்
எனக்கு
மீட்ட வேண்டாம்.
கடைசி விருந்து முடிந்த பின்பு வந்த
அந்தகார இருள் சூழ்ந்தத் துயர் இரவில்
தன் மதுக்கோப்பையைக் கவிழ்த்துவிட்டு
மனிதர்களின் மேல் நம்பிக்கையிழந்து
உலகைக் காண சகிக்காமல்
திரும்பிப் படுத்துக்கொண்டார் அவர்.
ஆயிரம்
சுத்தியல்கள்
ஒரே ஓர்
ஆணி
இந்த
ஆணியையும்
ரட்சியும்
என்றார்
அவர்.
நீங்கள் இப்போது வணங்குவதெல்லாம்
சிலுவையில் அறையப்பட்ட அவரின்
சடலத்தைத் தான்.
சடலத்தையும் விட்டு வைப்பதில்லை இவர்கள்..
பாவம் தீர்க்க அவர் ரத்தத்தை எடுத்து அவர் குடித்து வைத்த அதே மதுகோப்பையில் ஊற்றி குடித்துக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு என்னை பற்றிய கவலைகள் ஏதுமில்லை.
அடுத்த முறைக்கு ரத்தம் மீதமிருக்குமா என்பதே அவர்களின் கவலை..
எனக்கு
நானே
மீட்டும்
யாழை
நீங்கள்
உடைக்காமல்
இருந்தால்
போதும்..
இப்படிக்கு
இன்னும் சிலுவையில் அறையப்படாத கர்த்தன்.
Comments
Post a Comment