சமையல் Stories

"வலி, காயம், தழும்பு, தகவமைப்பு குறித்து கவலைப்படுகிற எந்த உயிரும் சர்வைவலில் ஜெயித்ததாக வரலாறு இல்லை. வாழ்க்கை முழுதும் தன்னை தகவமைத்து கொண்டிருக்க வேண்டும், எங்கேயும் நின்று நிதானமாக யோசிக்க முடியாது, கொஞ்சம் அசந்தாலும் சுத்தி இருக்க எவனாவது ஒருத்தன் தூக்கிடுவான்”  
இதற்கான பதிலை கடைசியில் சொல்கிறேன்


 கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் கிட்டத்தட்ட 23 வயது வரை  வளர்ந்தவன் நான். உணவோ, உடையோ, சினிமாவோ, புத்தகங்களோ எதுவுமே கேட்காமலே கிடைக்கும்  குடும்பத்தில் தான் பிறந்தேன். அதுவும் ருசியான உணவுக்கு பஞ்சமேயில்லாத வாழ்க்கை. தாய் அரசு ஊழியர். அடுப்பை அணைக்க மறுப்பவர் வீட்டில் எப்போதும் எங்களை வீட்டில் உள்ளவர்களை விட ஒருவருக்கு  அதிகமாகவே உணவு இருக்கும். வாரத்தில் இரண்டு நாள் காலை என் பள்ளி நாட்களில் Afi அம்மாவிடம் பருப்புவடை  வாங்குவோம்,வீட்டில் அரைக்கும் சட்னி தவிர்த்து. தாத்தா இருந்த வரை காலை பருத்திப்பால் ,வாரத்தில்  இரண்டு நாள் இரவு மேட்டுத்தெரு ஸ்டார் பை நைட்டில் புரோட்டாவுடன். வியாழக்கிழமை ராணி அக்காவிடம் மீன், ஞாயிறு வீட்டில் நிச்சய அசைவம். ஞாயிறு பாஸ்டின் நகர் திருப்பலி முடிவில் நித்ய ஸ்துதிகுரிய போடும்போது வீட்டில் சாம்பார் மணக்கும்.

ஊருக்கு செல்வது என்றால் கூட  முதல் நாள் இரவு, புளிசாதம் , தக்காளி கூட்டு தயாராகும்.கல்லூரி நாட்களில் ஒரு தடவை சென்னை செல்லும் போது கூட ரெஜி சித்தி அம்மாவிடம் தயிர் லேசா உறைஞ்சாப் போதும், காலையில பாலை சூடு பண்ணி ஊத்துவோம், அப்பத்தான் மதியம் அவன் சாப்பிட புளிக்காம இருக்கும் என்ற பக்குவங்கள் பகிரப்படும். இரவே முத்து கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கப்பட்டிருக்கும். PTR, பேச்சியம்ம கடையில் பருப்பு வடை வாங்குடா, உளுந்த வடை மதியம் வரை தாங்காது என உத்தரவுகள் பறக்கும். காலையில் புதினா சட்னி அரைத்து புளியோதரை பேக் செய்த பின்னால் தான் எல்லாம் ரெடி, எந்த இடைகாட்டூர் திரு இருதய ஆண்டவர் கோவிலுக்கா,வாடிபட்டி  மாதா கோவிலுக்காப்என்ற கேள்வியே எழும்பும்.

எங்கள் வீடாவது பரவாயில்லை. என் பெரியம்மா (அம்மாவின் அக்கா) வீடு இன்னும் ஒரு படி மேல். என் தாத்தா (அம்மாவின் தந்தை) ஒரு ஓய்வுபெற்ற தலைமை காவலர் ஊரின் நிலக்கிழாரில் ஒருவர். மூத்த மகளுக்கு சொந்தத்தில் மணம் முடித்தார் அதே சமயம் பெரியப்பா அரசு அதிகாரியூம் கூட, பாலகுறிச்சியில் நிலக்கிழார் . அவர் உறவுக்காரரும் கூட. என் பெரியம்மாவிற்கும் என் அம்மாவிற்கும் 6 வயது வித்தியாசம். இடைப்பட்ட காலத்தில் விவசாயம் சற்று நொடிக்க, என் அம்மாவிற்கு அரசு வேலை என்பதால் அரசு வேலை மாப்பிள்ளையே தேடினார் சொந்தத்தில் முடிக்காமல் அந்நியத்தில் முடித்தார் . அதனாலோ என்னவோ என் பெரியம்மாவிற்கு அம்மா மேல் கூடுதல் கரிசனம். அவருக்கு ஒரு பையன், இரண்டு பெண். வீடே விவசாய விளை பொருட்களாலும், விருந்தினர்களாலும் நிறைந்திருக்கும். பாலகுறிச்சியிருந்து இருந்து ஊருக்கு வருபவர்கள் என் பெரியம்மா வீட்டிற்குத்தான் வருவார்கள். எல்லோரும் கூடும் மையமாக அந்த வீடு இருந்தது. தினமும் சொந்தம், பெரியப்பாவின்  நண்பர்கள் நான்கைந்து பேராவது காப்பி சாப்பிட வந்துவிடுவார்கள். மதிய சாப்பாடு ஒன்றிரண்டு பேருக்கு கூடுதலாகவே செய்யும் படி இருக்கும்.   பெரியம்மா போடும் Sunrise காபி, வத்தல் வடகம் போடுவது, சாம்பார் பொடி Little Flower Flour Mill ல்  அரைப்பது எல்லாமே ஒரு விழா போல நடக்கும். 

என் அண்ணன் (பெரியம்மாவின் பையன்),நான் அங்கு இருந்த போது  பெரும்பாலான ஆண்டுகள் வெளியூரில் வேலை பார்த்தார். அதனால் நான் தான் அந்த வீட்டுக்கும் கிட்டத்தட்ட செல்லப்பிள்ளை. கடை கண்ணிக்கு சலிக்காமல் போய் வருவேன். என் வளரிளம்பருவத்தில் பெரியப்பாவிற்கும்  பத்திநாதன் Uncle க்கும் சில உ.பா. விருந்துகளில் பரிமாறிய அனுபவம் உண்டு, அதுவும் நான் தான் வாங்கிக் கொடுப்பேன். பெரியம்மாவின் வீடு திருச்சியில்  இருந்தது. அதனால் எங்கள் வீட்டில் என்ன செய்தாலும் ஊருக்கு வரும் போது   அங்கே கொடுத்துவிட்டு, அங்கே என்னவோ அதை எங்கள் வீட்டிற்கு வாங்கி வருவேன். அதனால் ஒவ்வொரு தடவையும் சாப்பாடும் வெரைட்டியாக இருக்கும். 

கிட்டதட்ட சின்ன மகன் என்றுதான் என் பெரியம்மா என்னைக் குறிப்பிடுவார்.என் கல்லூரி நாட்களில்  டேய், நாளைக்கு பாலகுறிச்சி கம்மாய்ல இருந்து  அயிரை  மீன் பிடிச்சுக் கொண்டு பழனிச்சாமி வராங்கடா. ராணிய சமைக்க வேணாம்னு சொல்லிடு என சொல்லி விடுவார். என் அம்மாவும் தன் பங்குக்கு, காலை சாப்பாடு நான் கொடுத்து விடுறேன். உங்க பெரியம்மாகிட்ட குடுத்திடு வா என்பார்கள்.  இப்படி ஒரு தடவை மதுரைக்கும் திருச்சிக்கும் குழப்புக்காக அடித்த பயணம் எல்லாம் உண்டு.
மாலை வேளைகளில் பள்ளி முடிந்த உடன் பெரியம்மா  வீட்டிற்குத்தான் வந்தவுடன். முறுகலாக இரண்டு தேங்காய் பூ போட்ட  தோசை, Sunrise காபி ஜோஸ்பின் அக்கா போட்டுத் தருவார்கள். வெரைட்டியைப் பொறுத்தே இரவு உணவு Test Matchஆ, ODIஆ  என முடிவு செய்வேன்.

திருவிழா சமயங்களில் காளையார்கோவிலுக்கு சென்றால் , இன்னும் விசேஷம். பெரிய வீடு. பெரியப்பா, பெரியம்மா மாமா அத்தைகள், சித்தப்பா சித்தி என நிறைந்திருக்கும். கெடா, சாவ என்றுதான் பேச்சே இருக்கும்.   அப்பாவின் மீது இருக்கும் பயம் கலந்த மதிப்பிற்காகவே  என இன்னும் சிறப்பாய் கவனிப்பார்கள். யோசித்துப் பார்த்தால் என் இளமைக்காலத்தில் ஒரு வேளை கூட பட்டினியாய் இருந்ததில்லை என்று சொல்வதை விட ருசியான சாப்பாடு இல்லாத வேளையே இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும் உபயம் பெரியம்மா அம்மா.

இவ்வளவு சமையல் நடந்தாலும் எங்கள் வீடுகளில் ஆண்கள்   சமையலில் பெரிய ஈடுபாடெல்லாம் கிடையாது சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்க விளக்க மாட்டார்கள்.  சமையல் கட்டுக்குள் யாரும் பெரியளவில்  நுழைந்ததே இல்லை. பாசமாக இருப்பார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஹோட்டலில் வாங்கலாம் என்றுதான் நினைப்பார்களே தவிர தப்பித்தவறி கூட நாம் செய்து தருவோமே என நினைக்க மாட்டார்கள். தண்ணீர் குடிக்க நான் அடிப்படிக்குள் போனால் கூட, நீ ஏண்டா இங்க வர்ற, கொண்டு வர மாட்டோமா என்றுதான் அம்மா, பெரியம்மா, அப்பாய் கோபிப்பார்கள். இதனாலேயே என்னவோ எனக்குள் ஆண் சமையலறைக்குள் செல்லவே கூடாது என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்திருந்தது.

சென்னைக்கு வேலையின் காரணமாக வந்த  பின்னும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான்.  வந்த புதிதில் அதிக அளவில் வெளியே தான் சாப்பாடு அண்ணாநகர் வந்த பொழுது என் அறையில் மகா அக்காவும்  சிறப்பாக சமைக்க கூடியவர். மேலும் என் அறைத்தோழற்களும் பசிக்கு சாப்பிடுபவர்களே தவிர ருசிக்கு சாப்பிடுபவர்கள் அல்ல அதனால் பெரிதாக சிரமப்படவில்லை. 

இதனால் இன்னும் என் சுக வாழ்க்கை நீடித்துக் கொண்டே போனது. சமையலில்  உதவி செய்ய வேண்டும் அதுவும் நம் கடமை என்ற எண்ணம் துளிக்கூட ஏற்படவில்லை. மேலும் என்  வேலை, Civils Preparation என இருப்பதால் எனவே மாலை வேளைகளில் அவற்றை சமாளிப்பது மட்டுமே என் வேலை என்றும் ஆகிவிட்டது. மாலை வேளைகளில் Current Affairs, Mains Preparation, TNPSC க்கு இரவு நேரங்களில் Tatkal Slot Allotting, Akilesh க்கு Account Closing  என் கடமை முடிந்தது என இருப்பேன்.

ஓர் இரு  ஆண்டுகள் இப்படியே ஓடி விட்டன. வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் தளர்ந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் என் 2016 ஜனவரி மாதம் என் அம்மா  உடல்நலம்  பாதித்தது. இரண்டு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நிலை. இரவு உணவு ஹோட்டலில் வாங்கி விடலாம் என்றாலும், காலை ஏழரைக்குள்  லிசாவிற்கு காலை சாப்பாடும், மதிய சாப்பாடும் முடிக்க வேண்டிய சூழல். முதல் ஒரு வாரம் ஹோட்டலில் பூரி, பொங்கல் என மாற்றி மாற்றி வாங்கி கொடுத்து விட்டேன். அடுத்த வாரம் Counter Measure ஆக  பெரியம்மா வந்துவிட்டாலும்  அப்போது தான் கொஞ்சம் சிந்திக்க தொடங்கினேன்..எனக்குத் தெரிந்தது நூடுல்ஸ், ஆம்லேட், டீ போடுவது மட்டும். 

அதன் பின் சென்னை கஷ்டப்பட்டு சாதம் வைத்து, தயிர் சாதமாக்கி ஆம்லேட்  போட்டுவிட்டேன். அடுத்த வாரத்தில் ரசம் பழகினேன்.சரி சாம்பார் பழகுவோம் என முயற்சி செய்கையில்  வைத்தது சாம்பார் ஆனால் வந்தது புளிகுழம்பு பிறகு குழம்பு வைத்து விட்டு பெயர் வைக்க துவங்கினேன் இப்போது பெயர் வைத்து குழம்பு வைக்க ஆரம்பித்து விட்டேன் இரண்டு நாள் தயிர் சாதம், இரண்டு நாள் ரசம் சாதம், இரண்டு நாள் ஹோட்டல் என மாற்று மாற்றி பழகிகொண்டேன். 

அதன்பின் ஓராண்டு ஆகியிருக்கும். எனக்குள் சில எண்ணங்கள். என்னடா இது, நாம் பெரியார் என்கிறோம், சமூக நீதி, சமத்துவம் என்கிறோம். Women's Empowerment என்கிறோம் Brazil ல் நம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு மிதிவண்டி கொடுக்கும் திட்டத்தை உலகின் முற்போக்கு திட்டங்களில் ஒன்றாக கருதுகிறார்கள் ஏனென்றால் நம் பெண்ணை ஓற் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க்கு நகர செய்கிறோம், Yes We are making a Girl to Move. ஆனால் வீட்டில் சமையலில் கொஞ்சம் கூட ஒத்தாசை செய்வதில்லை. செய்தால் அவருக்கும் கொஞ்சம் இலகுவாக இருக்குமே என்று  தோன்றியது.

ஒரு நாள் காலை அலாரம் அடித்த உடன் விழித்து, அவரை எழுப்பாமல் காப்பி போட்டு வைத்து விட்டு, இரண்டு டம்ளர் அரிசியை குக்கரில் போட்டு விட்டு,மாமாவுடன் சேர்ந்து கொஞ்சம் வெங்காயம் உரித்து வைத்து விட்டு எழுப்பினேன். நண்பன் ஜோதி கடையில் ஒரு ரெட்டைவட நெக்லஸ் வாங்கித்தந்து ஓம் முருகா சாரீஸில் ஒரு நூல் புடவை வாங்கித்தந்திருந்தால் கூட அப்படி ஒரு சந்தோசத்தை அவரின் முகத்தில் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே. 

இப்போதெல்லாம் மதுரை செல்லும் போது காலை வேளையில் உடன் நின்று சமையலில் உதவி செய்கிறேன். ஞாயிறுகளில் நானே சமைக்கத் துவங்கியிருக்கிறேன். இத்தனை நாட்கள் உடன் உதவி செய்யாததை நினைத்து வருந்துகிறேன்.

மேலே சொன்ன தொடருக்கான பதில் "Survival of the Fittest" இல்லையென்றால் அடுத்த தலைமுறையிடம் குடுக்கபோகும் விலை அதிகம். நம் அடையாளத்தை கூட இழக்க நேரிடலாம்.

என் அம்மாவிடம் மட்டுமல்ல. என் அப்பாய், பெரியம்மா மற்றும் அக்காக்கள்,  என என்னை சமையலறைக்குள் விடாமல் என்னை சுகவாசியாக வளர்த்தவர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நான் உதவி செய்திருக்க வேண்டும். காலம் பூராவும் அடுக்களையில் நின்ற உங்களுக்கு கொஞ்சமாவது விடுதலை கொடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தித் தான் உறைத்திருக்கிறது. இன்னுமே உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை சமையலறைக்குள் அனுமதிக்கப் போவதில்லை தான். உணவு பரிமாற, எடுத்து வைக்கவாவது என்னை விடுங்கள். என்னால் முடிந்ததெல்லாம் வரும் காலங்களில் என் தலைமுறைக்கு இனி  சமையலில் பயிற்றுவிப்பதுதான். ஏனேனில் தகவலை கடத்துவற்க்குத்தானே நாம் இவ்வுகத்திற்கு படைக்கபட்டிருக்கிறோம்.


Thanks @Muralikannan Sir


(Heavily Inspired  (Euphemism of Copying 😁😁😁) from Muralikannan Sir Blog( FB post)

Comments