Interesting Facts

                                                                                                                                                     உலகிலேயே மிக மோசமான உணவுகள் எந்த நாட்டில் கிடைக்கும் என்றால் அது ப்ரிட்டன் தான். ப்ரிட்டிஷ் பாரம்பரிய உணவுகள் அத்தனை கேவலமான சுவையுடன் இருக்கும்.
அதனால் இந்தியாவை அவர்கள் பிடித்தார்களோ இல்லையோ, ப்ரிட்டன் முழுக்க இந்திய உணவுகளின் ஆதிக்கம்தான். குறிப்பா அவர்கள் பட்டர் சிக்கன் மசாலா ப்ரிட்டிஷ் உணவுப்பொருள் என்றே நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து அவர்கள் திருடிக்கொண்டு போனபொருள் முல்லிகாதவ்னி (Mulligatawny)
அது என்ன்னனு குழம்பவேண்டாம். நம் ஊர் ரசம்தான். மிளகுத்தண்ணி என்பதை தான் அந்த அழகில் சொல்கிறார்கள்.
அதே போல் கருமிளகு (பெப்பெர்) என்றால் அவர்களுக்கு பைத்தியம். கருமிளகை தேடித்தான் வாஸ்கோடகாமா பைஜாமா போட்டுகொண்டு கேரளா வந்தார் :-)
அதே கருமிளகை (black pepper) தேடிக்கொண்டு தான் கொலம்ப்ஸ் அமெரிக்கா போனார். போனால் பச்சைமிளகாய் தான் இருந்தது. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சக்கரை கதையாக அதை கப்பலில் ஏற்றிக்கொண்டு ஸ்பெய்ன் போனார். அதை கருமிளகின் ஒரு வெரைட்டி என நினைத்து Green pepper என பெயர் சூட்டினார்.
கேப்ஸிகம் (bell pepper) முதல் எல்லா பெப்பரின் பூர்விகமும் தென்னமெரிக்காதான். பச்சைமிளகாய் , சிகப்புமிளகாய் (Green pepper, red pepper) எல்லாமே பூர்விகம் தென்னமெரிக்காதான். எல்லாவற்றின் பெயரும் பெப்பெர் என முடிய காரணம் நம் கருமிளகின் வெரைட்டிகளில் அவை ஒன்று என அவர்கள் நினைத்ததே. அவை எல்லாமே ஸ்பானியர்கள், போர்ச்சுகிசியர்கள் மூலம் இந்தியா வந்ததே. அவர்கள் வைத்த பெயரை தமிழ்படுத்தி தான் அவற்றை பச்சை மிளகாய், குடை மிளகாய் (மிளகு+காய்) என அழைக்கிறோம்.
தேங்காய்க்கு கோகநட் என பெயர் வந்த கதை சுவாரசியமானது. ஐரோப்பியர்களுக்கு தேங்காய் அறிமுகமானதே 1001 இரவுகள் சிந்துபாத் கதைகளில் தான். அக்கதை ஒன்றில் சிந்துபாத் தேங்காய் விற்பதாக வரும். சிந்துபாத் கதையில் அதன் பெயர் ஜவ்சாஸ் ஹிண்ட் (இந்திய கொட்டை என பொருள்). மார்க்கபோலா கதையிலும் அதே பெயர்தான். தேங்கா என அழைக்கும் வழக்கமும் ஐரோப்பியரிடையே இருந்தது. ஆனால் அவர்கள் அப்பல்லாம் தேங்காயை பார்த்தது கூட இல்லை. நூல்களில் படிப்பதுதான்.
இந்த சூழலில் பிலிப்பைன்ஸ் போன மெகல்லனின் கப்பல் ஆசாமிகள் 1521ல் முதல்முதலாக தேங்காயை கண்டார்கள். அதன் மூன்று கண்கள் அவர்களுக்கு ஒரு சிரித்த முகமுள்ள ஆளை நினைவூட்டியது. அதுக்கு அன்றைய போர்ச்சுகிசிய-ஸ்பானிய மொழிகளில் கோகோஸ் என பெயர். அதனால் அதுக்கு கோகநட் (மனித முகமுள்ள கொட்டை) என பெயர் வைத்துவிட்டார்கள்.
நாமும் இதே காரணத்துக்காக தானே தேங்காயை லட்சுமி, வினாயகர், சிவன், பெருமாள்ன்னு உருவகம் பண்ணி பூஜை எல்லாம் பண்றோம்?
சர்க்கரையை சீனி என அழைக்கும் காரணமும் வேடிக்கையானது. ஹர்ஷவர்த்தனர் காலத்தில் சீனாவில் இருந்து வந்த ஒரு பவுத்தர் கருப்பட்டி தயாரிக்கும் வித்தையை கற்றுக்கொண்டுபோய் சீனாவில் கருப்பட்டி தயாரித்தார். அதில் கெமிக்கல்களை கலந்து வெள்ளை சர்க்கரையை கல்கண்டு உருவில் செய்தார். இந்த வெள்ளை சர்க்கரை இந்தியாவுக்கு ஏராளமாக ஏற்றுமதி ஆனது. சோழர் காலத்தில் அவர்களுக்கும் நமக்கும் நல்ல வணிக உறவு இருந்தது. சீனாவில் இருந்து வந்ததால் சீனிச்சர்க்கரை ஆகிவிட்டது. இன்றுவரை அதே பெயர்தான்

Comments