கு.ல என்கிற மகா



நாங்கள் மத்திய தேர்வணைய தேர்வுக்கு படிக்கவந்த புதிதில் சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தோம். அப்போது எங்கள் வீட்டிற்கு சமையல் பணி செய்ய உதவியாக வந்தவர் மகா அக்கா. அப்போது அவர் இரண்டு மூன்று வீடுகளில் வேலை செய்து வந்தார். எங்கள் அறையில் சமைக்க பாத்திரம் விலகக் ரொம்ப கரெக்டாக இருப்பார் என்று சொல்ல முடியாது அவ்வப்போது கோவிலுக்கு என்று சாமி கும்பிட லீவு போடுவார். அதே போல அக்கா ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டிலும் வேலை பார்த்ததால் Oh My Goodness போன்று அடிக்கடி ஆங்கிலத்திலும் பேசுவார்கள். கையில் கு.ல என்று பச்சை குத்தியிருப்பார் அது போலவே அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக வருவார். வேறு எதுவும் பேச்சுகள் எதுவும் இல்லாது பணிகளை முடித்து விட்டு, சென்று விடுவார்.  ஒரு ஞாயிறு மாலை அவர் வேலை முடித்து விட்டுச் செல்ல யத்தனிக்கும் போது பெரு மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கும் வரை அக்கா முடிஞ்சா பஜ்ஜி போட்டு கொடுங்க என்று சொல்லி பாட்டை போட்டு விட்டு வீடை சுத்தம் செய்ய ஆரம்ம்பித்தோம் அப்பொது Spoitfy ல்  ஒரு எம்ஜியார் பாட்டு வந்தது. அது வரை அசுவராசியமாகிய பஜ்ஜி போட்டு கொண்டிருந்தவர் தம்ம்பி சத்தமா வை. நானும்  சரி என்று சத்தமாக வைத்தேன்.

அது எங்களுக்குள்ளான ஒரு பாசப் பிணைப்பு துவங்க ஒரு புள்ளி எனச் சொல்லலாம். அதிலிருந்து வீட்டிற்கு வந்தால் தம்பி Youtube ல MGR பாட்ட போட்டு விடு என்று சொல்லிதான் சமைக்கவே ஆரம்பிப்பார். அவ்வப்போது MGR வசனங்களையும் சங்க தமிழ் பாடல்களை எங்களை பேச சொல்லி ரசிப்பார். எங்கள் அறை முழுவதுமே தமிழ் விருப்ப பாடம் எடுத்தவர்கள் என்பதால் அனைவருக்கும் ஒரளவுக்கு சங்கத்தமிழ் பாடல்கள் தெரியும். அதனால் “கொங்கு தேர் வாழ்க்க அஞ்சறை தும்பி” என்ன்று அக்காவிடம் அவ்வப்போது பாடி காட்டுவது. அதேபோல TamilRockers  ல் MGR படங்களை தரவிறக்கி தர சொல்லுவார்கள். நாங்கள் எவ்வளவு சமைக்க சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்வார்கள். என் அம்மா தங்கை சென்னை வந்த சமையம் ஒரு 7 கிலோ மீன் எடுத்து அக்கா வும் என் அம்மா சேர்த்து எங்களுகெல்லலம் சமைத்து போட்டனர். அதேபோல மத்த வீடுகளை போல இல்லாமல் எங்க்ள் வீட்டில் வெள்ளி கிழமை ஆனால் எங்களுக்கு சுத்தி போடுவது, எல்லையம்மன் கோவிலில் என் பெயருக்கு அர்ச்சனை செய்வது போன்று  அவராகவே பணிகளை எடுத்துப் போட்டு செய்தார். அதே போல அவருக்கு காபி தான் பிடிக்கும். மற்ற வீடுகளில் அப்போது என்ன செய்கிறார்களோ அதைத் தருவார்கள். எங்களிடத்தில் அவரே உரிமையாக காபி / டீ போட்டுக் கொள்வார். போதாக்குறைக்கு நான் பிறந்த ஊருக்கு அருகே தான் அவர் ஊரும்.இப்படியாக எங்களிடையேயான இறுக்கம் தளர்ந்த நாட்களில் தன் குடும்பக்கதையை பகிர்ந்து கொண்டார்.

அக்கா நல்ல வசதியான விவசாயக் குடும்பத்தில் நான்கு அண்ணன்களுடன் பிறந்தவர். அவர் காதல் திருமணம் செய்த்தால் அவர் குடும்பத்துடன் பெரிய தொடர்பில்லை. அவர் கணவரும் தன்மையானவர். அவருடன் பிறந்தவர்கள் அக்கா, தம்பியென நால்வர். பெரிய வசதி இல்லாத குடும்பம். இவர்களுக்கு மணமாகி இருவது ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. மகா அக்காவின் திருமணத்திற்குப் பின் அவர் அப்பா, அம்மா இருவரும் நான்காண்டு கால இடைவெளியில் இறந்து போய் விட்டனர். பேரிடியாக அக்காவிற்கும் குழந்தை இல்லை . அதனால் புகுந்த வீட்டிலும் / பிறந்த வீட்டிலும்  அவர் ஒட்ட முடியாத சூழல் நிலவியது. பிறந்த வீட்டிலும், அவரை ஏற்றுக் கொள்ள யாரும் விரும்பவில்லை. எனினும் ஏதேனும் விழாக்களுக்கும், சடங்குகளுக்கும் சம்பளமில்லா வேலைக்காரியாக அங்கே தன்னை மாற்றிக் கொள்வார். அத்தனை வேலைகள் முகம் சுளிக்காமல் செய்வார் அத்தனை பேருக்கு சமைத்தாலும் கடைசியாக மிஞ்சும் உணவையே உண்ணும் நிலை.

அதெல்லாம் கூடப்பரவாயில்லை தம்பி, எனக்கு என்னவோ சின்ன வயசில் இருந்தே எம்ஜியார் படம்னா பிடிக்கும். எங்க ஊர்ல எப்ப எம்ஜியார் படம் வந்தாலும் ரெண்டு மூணு வாட்டி பார்த்திடுவேன். என் வீட்டுக்காரருக்கும் எம்ஜியார்னா உசுரு. டவுனுக்கு போனா படம் பார்த்துட்டு  கடையில் ஒரு காப்பி இல்ல டீ சாப்பிட்டுத்தான் வருவோம் தம்பி. அப்படித்தான் எனக்கு காப்பி பழக்கம் வந்துச்சு. அது என்னமோ காப்பி எனக்கு பிடிச்சுப் போச்சு. இவங்க கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன். எப்பவாச்சும் எம்ஜியார் படம், என்னைக்காச்சும் அர வாய் காப்பி. என்ன இப்பவரை எங்க வீட்டுல சேர்க்க மாட்டிகிறாங்க இங்க பொழைச்சுக்கிலாம்னு சென்னை வந்திட்டோம். அந்த மகராசனை நேரில பார்க்கனும்னு ஒரு ஆசையும் இருந்துச்சு. நான் வந்து கொஞ்சநாள்ல அவரும் போய்ச் சேர்ந்துட்டார். அப்படியே இங்க மிச்ச காலத்த கழிச்சிருவோம்னு இருந்துட்டேன். மனசு சரியில்லன்னா பீச்சுக்கு போயி அவர் சமாதியைப் பார்த்துட்டு வருவேன். அப்ப என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லுவேன், பாருய்யா ந்மக்கு பிள்ளை இல்லைனாலும் சாகுற வரைக்கும் வார வாரம் என்ன கூட்டுட்டு வந்திடுன்னு.

ஆற்றாமையில் கொட்டிவிட்டு, சொன்னார், எங்க அப்பாக்கு எங்க ஊர் சாமிக்கு பூ அலங்காரம் விசேசத்துக்கு செய்யனும்னு ஆசை. அவர் இருந்தவரைக்கும் திருவிழா தவறாம கொடுத்துடுவார். இப்ப அண்ணன்க செய்யுறாங்களான்னு தெரியாது, நீங்க உங்க ஊருக்குப் போகும் போது, ஒரு எட்டுப் போயி, எங்க ஊர் கோயில்ல எங்க அப்பா பேரைச் சொல்லி பூ அலங்காரத்துக்குன்னு நான் கொடுக்கிறத கொடுங்க என்பார். அதன்படி அவ்வப்போது கொடுப்பேன்.

2021 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தது. திமுக வெற்றி பெற,பெற மகிழ்ச்சியோடு இருந்து கொண்டிருந்தேன். ஸ்வீட் வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது மகா அக்கா வீட்டுக்கு வந்தார். அக்கா ஸ்வீட் சாப்பிடுங்க என்ற உடன் என்ன இவ்வளோ சந்தோஷம் என்றார்? திமுக கட்சி ஜெயிச்சிருச்சு என்றேன். இரவுக்கு பிரியாணி செய்ங்க அவர் முகம் களை இழந்தது.
என்ன தம்பி, நீங்க கலைஞர் கட்சியா என்றார். கட்சி லாம் இல்லக்கா ஆனா அவரை ரொம்ப பிடிக்கும் என்றேன். அவருக்கு நிறைய சம்சாரம், எங்க எம்ஜியாருக்கு அவரைப் பிடிக்காதே என்றார். சம்சாரம் அவங்க குடும்ப பிரச்சினை. மக்களுக்கு நல்ல நல்ல திட்டம்லாம் கொண்டு வந்திருக்கார் என்றேன். தேர்வுக்கு படித்தவன் என்கிற முறையில் தமிழ்நாடு யாரின் திட்டங்களால் முன்னேறியது என்பது எனக்கு நன்கு அறிந்தவன் நான், எனக்கு என்னவோ அவரைப் பிடிக்காது தம்பி என முடித்துக் கொண்டார்.

ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி என கலைஞரின் திட்டங்கள் மகா அக்கா பல நன்மைகள் அடைந்துள்ளார். பார்த்தீங்களா எங்க ஆட்சியை?, இப்ப எம்ஜியார் படத்தை கூட நீங்க எப்ப வேணுமுன்னாலும் கலைஞர் கொடுத்த வண்ண தொலைக்காட்சி ல தான் பாக்குறிங்க என கிண்டலடிப்பேன். அவரோ போங்க தம்பி, எங்க அம்மா கொடுத்த லேப்டாப் ல தான் அவரோட பாட்ட பாக்குறேன். அக்கா இனிமே நீங்க அண்ணோட பீச்சுக்கு ஸ்டாலின் மகளீர் பஸ்ல இலவசமாக போகலாம் க்கா என்பேன் நக்கலாக எங்க அம்மா உயிரோட இருந்தாலும் கொடுத்திருக்கும் என முடித்துக் கொண்டார்.

அடுத்த சில மாதங்களில் வேறு அறைக்கு மாறி செல்ல வேண்டிய சூழல். எங்க புது வீட்டு சமைக்க வந்திருங்க என்று சொல்லிப் பார்த்தோம். அவருக்கோ 12th Main Road  தான் மனதுக்கு உகந்ததாய் இருந்தது.  மகா அக்காவை விட்டு பிரியவே மனம் இல்லை. நான் எங்க வீட்டுல இருந்த மாதிரியே இங்க இருந்தேன் உங்கனால என கண்ணீர் சிந்தினார். 

அவர் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த வீட்டுக்காரர்களின் எண்களை வாங்கிக் கொண்டேன். தீபாவளி போன்ற விசேச நாட்களில் அவருக்கு பேசுவோம். அண்ணா நகர் அய்யப்பன் கோவில் வழியாக போகும் போதெல்லாம் அண்ணனை பார்த்துவிட்டு மகாலட்சுமி டீ கடையில் ஒரு டீ குடித்துவிட்டு செல்வது வழக்கம் ஊருக்குப் போகும் போது அவர் அப்பா பெயர் சொல்லி பூ அலங்கார காணிக்கையும் அவ்வப்போது கொடுப்பதுண்டு.

திடீரென ஒரு நாள் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். மகா அக்காவின் உறவினர்களாம். கோவில் பூசாரி மூலம் நான் மகா தந்தை பெயரில் பூவுக்கு காசு கொடுப்பது அறிந்து என் ஊரில் விசாரித்து இங்கே வந்துவிட்டார்கள். வேறு ஒன்றும் இல்லை. அவர்கள் தந்தை இறந்த உடன் வீடு, சொத்துக்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரிடம் அப்போது இருந்த நாப்பது ஏக்கர் நஞ்சை, நாலு வீடுகளை சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள். அப்போது ஊரை விட்டு வெகு தொலைவில் இருந்த இரண்டரை ஏக்கர் வானம் பார்த்த பூமியை பேச்சு வார்த்தை சரி வராமல் விட்டு வைத்திருந்திருக்கிறார்கள். அதில் உடனடி வருமானமும் இல்லாததால் அப்படியே போட்டு வைத்து விட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமாகிக் கொண்டே வர, அது அப்படியே பொதுச் சொத்தாக இருந்து கொண்டே இருந்தது.
இப்போது அந்தப் பக்கம் ஒரு மேம்பாலம், நான்கு வழிச் சாலை, ஏராள கேட்ட் கம்யூனிட்டி குடியிருப்புகள் வர வர அந்தப் பகுதியின் நில மதிப்பு விண்ணைத் தொட்டது. புகழ்பெற்ற ஒரு கட்டுமான நிறுவனம் அந்தப் பகுதியில் கால் பதிக்க இவர்களின் இடத்தை தேர்வு செய்தது. 500 கோடிக்கும் மேற்பட்ட பிராஜக்ட் எனவே பத்திரம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டுமென அவர்கள் லீகல் டிபார்ட்மெண்ட் ஒப்பீனியன் கொடுக்க, உள்ளூரில் விசாரித்தது அவர்கள் டீம். ஒரு பெண் வாரிசு இருக்கிறார். அவர் கையெழுத்து இருந்தால் தான் அது செல்லும் என கலைஞர் 1989ல் போட்ட பெண்ணுக்கு சொத்தில் உரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி சொல்ல. அவரைத் தேட ஆரம்பித்து என்னிடம் வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பகுதியில் இப்போதைய செண்ட் மதிப்பு பத்து லட்சம். ரெண்டரை ஏக்கருக்கு 25 கோடி வரும். ஐந்தாகப் போட்டு 5 கோடி கொடுங்கள் எனக் கேட்டேன். இதை மகா அக்காவிடமும் தெரிவித்தேன். அவரோ அதிர்ச்சி அடைந்தே விட்டார். பின்னர் ஊர்காரர்கள், அவங்க கொடுக்குறத வாங்கிக் கொடு தம்பி, இல்லேன்னா வண்டி ஏத்தி தூக்கி விட்டுருவாங்க அவங்க அண்ணன் பிள்ளைக என்றார்கள். இறுதியில் 3 கோடி என முடிவானது.

பத்திரப்பதிவு நாளும் வந்தது. கம்பெனி பணத்தை, நேரடியாக மகாவிடம் கொடுத்தது. சார் பதிவாளர் அலுவலகத்திற்கு என்னையும் வர சொன்னார்கள் அவருடன் சென்றேன். சார்பதிவாளர் முன்னிலையில் போட்டோ எடுத்து கையெழுத்து இடும்போது தான் கவனித்தேன் மகா அக்காவின் உண்மையான பெயர் குபேர லட்சுமி. ஆம் உண்மையில் அக்கா குபேர லட்சுமிதான். சார்பதிவாளரின் தலைக்கு மேல் மஞ்சள் சால்வை அணிந்த கலைஞர் சிரித்துக் கொண்டிருந்தார்.

Credits:
Copied and Edited from
@teakkadai1 முரளிகண்ணன் Sir Twilonger

https://twitter.com/teakkadai1/status/1556690476618596929?t=xqov9wsMTTKU-G61hPVg4g&s=19

Comments

Post a Comment