ராகுல் திராவிட்


ராகுல் திராவிட்
ஒரு இரண்டு வருடம் முன்பு என் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய சமயம் பி பி சாவடி வாணி மெடிக்கல்ஸ்க்கு மருந்து வாங்க சென்றிருந்தேன் அன்று இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டம், அவரிடம் பேச்சு கொடுத்த போது தம்பி இன்னைக்கு மேட்சுப்பா காலைல இருந்து கடைக்கு வர மூணாவது வாடிக்கயாளர் நீதான்ப்பா என்று புலம்பினார்.

ஆம் இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். இதற்கு ரசிகர்களை விட வெறியர்களே அதிகம் இந்தியா - பாகிஸ்தான்அணிகள் மோதினாலோ அல்லது அரை இறுதியில் இந்திய அணி ஆடுகிறது என்றாலோ முடக்குசாலை முதல் முனிச்சாலை வரை வெறிச்சோடும் தாய் காபி பார் கூட்டத்தால் அம்மும் அதே போல சென்னையில் தாம்பரத்தில் இருந்து பேரீஸ் மற்றும் அம்பத்தூரிலிருந்து ஆவடி வரை சாலை காலியாகும் அலுவலகத்தில் கூட கிரிக்கெட் மேட்ச் ஓடும். மொபைல்களில் CricBuzzல் விரல்கள் மேயும்.

நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருந்து,வெறும்
11 பேர் மட்டுமே தேசத்தின் சார்பாக விளையாட வேண்டிய கட்டாயம்.
கொஞ்சம் சொதப்பினாலும், ஒட்டுமொத்த அணியின் வெற்றியைப் பாதிக்கும் என்பதால் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வீரர்கள்
விளையாட வேண்டும். கிட்டதட்ட கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலை.

அப்படி ஒரு நிலையில் இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் ஆடியவர் திராவிட், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாவின் ஆபாத்பாந்தவன், என்னளவில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு சில Shot கள் இருக்கும் அது விவ் ரிச்சர்ஸ்ன் Chewing Gum மென்று கொண்டே அடிக்கும் நடராஜா ஷாட் ஆகட்டும், சச்சின் தனது MRF விளம்பரத்தை காட்டி அடிக்கும் Straight Drive ஆகட்டும், பாண்டிங்கின் Pull Shot ஆகட்டும் இல்லை லாரா ஒரு வித எரிச்சலுடன் ஆடும் Off Drive ஆகட்டும்.

 இவர்கள் அனைவரையும் விட திராவிட் நினைக்கும் போது வருவது அவர் வைக்கும் கட்டைதான் அவ்வப்போது சில சுழற்பந்து விச்சாளர்கள் வீசும் பந்துகள் Off Sideல் குத்தும் பந்து சுழன்று, Leg Side போவதை போல வரும். கிட்டத்தட்ட ஸ்டம்ப் வரைக்கும் அதை வரவிட்டு, பந்தை கடைசி நேரத்தில் திருப்பும் அந்த Late Cut மற்றும் Square Cut திராவிட்டின் Classic Shots ஆக சில சமயம் தோன்றும் என்றாலும் திராவிட் கட்டை வைப்பதே ஒரு தனி அழகு தான்.

திராவிட் அறிமுகமானது 1996 இங்கிலாந்தில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்பெறும் லார்ட்ஸ் மைதானம், அன்றையகாலத்தில் இந்திய
கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் என்பது வெற்று சம்பிரதாயம். சச்சின் தெண்டுல்கர், ஒரு அதிரடி பேட்ஸ்மேனிலிருந்து ஒரு ஆளுமையாகஉருவாக துவங்கியிருந்த பருவம். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பூனை தான் நாம்.

சில போட்டிகளில் தெண்டுல்கரோ, அசாருதீனோ சில ஆறுதல் சதங்களை அடிப்பர். பொதுவாக இந்திய மட்டையாளர்களுக்கு மனநிலை என்பது 2000 முன் பந்து காற்றில் ஸ்விங்க் ஆகக் கூடாது, ஆடுகளத்தில் குத்திய பிறகு சீம் ஆகக்கூடாது, இடுப்புக்கு மேலே உயர எழும்பக் கூடாது, பௌன்சர் வரக்கூடாது, இதில் எதுவும் நிகழ்ந்துவிட்டால் உடனே கோபப்பட்டு அவுட் ஆகிவிடுவார்கள்.

இந்த சுற்றுப் பயணத்தில் சஞ்ஜெய் மஞ்சரேக்கருக்கு கணுக்காலில் காயம். இந்த ஒரு காரணங்களுக்காக மட்டுமே அன்று ஒரு வீர்ருக்கு இரண்டாவது டெஸ்டில் வாய்ப்பளிக்கப்பட்டது. உண்மையில் அணி நிர்வாகம் அவர் திறமையைஉணர்ந்தெல்லாம் வாய்ப்பளிக்கவில்லை. முதல் இன்னிங்க்ஸில் 344 ஓட்டங்களுக்கு அனைத்து வீரர்களையும் இழந்தது இங்கிலாந்து. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 25/1, இந்தியாவை ஃபாலோ ஆன் ஆக்கக் கூட இந்த 344 போதும் என்று நினைத்திருப்பர்.

ஆனால் கங்குலி, ராகுல் சரத் திராவிட் என்ற இரு புதிய இளைஞர்கள் அன்று அதற்கு குறுக்கேநின்றனர். நடு உச்சி எடுத்து சீவிய தலை மிக சாந்தமான பார்வை. பார்ப்பவர்களுக்கு, மனிதர் எப்போதும் சிந்தனையில் உள்ளார் என்று தோன்றும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை மனிதர் உடல்வளத்தில் பார்ப்பதற்கு அப்படியே இருந்தார். அதற்கு அவர் ஆட்டத்தில் காட்டிய காதலே காரணம் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டுகள் டிராவில் முடிந்தன. கங்குலி 131,136 என இரண்டு டெஸ்டுகளிலும் இரு சதங்களை அடித்தார். திராவிட்டின் பங்கு 95,84. துணையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த சச்சினுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ள, மூன்றாவது டெஸ்டில் 177 ரன்களை குவித்தார்.

இந்தியகிரிக்கெட்டின் புதிய தலைமுறை தலையெடுத்தது.அச்சமயத்தில் அதை எத்தனை பேர் கணித்திருந்தனர் என்று தெரியவில்லை, இவ்விளைஞர்கள் இந்தியக் கிரிக்கெட்வரலாற்றின் தலைசிறந்த அணித் தலைவராகவும், உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த மூன்றாம் எண் மட்டையாளர்களில் ஒருவராகவும் உருவாகத் தொடங்கிவிட்டனர் என்று.

96-ல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவருக்கு 97ல் தென்னாப்பிரிக்க பயணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்நிய தேச பிட்ச்களின் அதிகப்படியான பௌன்ஸர்களை திறமையாக கையாண்டார் . அந்த தொடரில் தனது முதல் சதத்தைபூர்த்தி செய்தார். அலன் டொனால்ட், லான்ஸ் குளூஸ்னர் போன்றோர் முக்கிப் பார்த்தும் முடியாது தோற்றார்கள். நன்கு பூசியசுவராக நின்று இந்தியாவை அணைகாத்தார்.

ஆனாலும் அவருக்கு ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை அதற்கு காரணம் ரொம்ப கட்டை வைப்பாருப்பா ரன்னே அடிக்க மாட்டாரு! செம போரு என்று அவர் மீது பொதுவான விமர்சனங்கள் உண்டு. அதற்கெல்லாம் பதில் அவருடைய சாதனைபுத்தகங்களில் கொட்டிக்கிடக்கிறது. ஆரம்ப காலக் கட்டங்களில் திராவிட் ஒருநாள் ஆட்டங்களில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள ரொம்ப நாள் எடுத்துகொண்டார். ஒரு ஆட்டத்தில் சச்சினோ கங்குலியோ விரைவில் ஆட்டமிழந்தால், குறைந்த பட்சம் ஆட்டத்தை தட்டி தட்டி 40 ஓவர்கள் வரை எடுத்துச் செல்ல சிறந்த வீரராக, திராவிட் தன்னை அடையாளப்படுத்தியதே அவர் ஒருநாள் ஆட்டங்களில் அவரை நிரந்தரமாக்கியது அதற்கான பதில் 1999 உலக கோப்பைத்தொடரில் வந்தது பேட்டிங்க்கான தொடர் நாயகன் விருதை வென்றார்.

காலம் மாற்றத்தைக் கொணர்ந்தது. மூன்று வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார். வெளிநாட்டுப் போட்டிகளில் ஓரளவுக்கு அணிப் போராடத் தொடங்கியிருந்தது. உபயம்
ஒரளவுக்கு வலுவான மட்டைவீச்சு வரிசை மற்றும் பந்து வீச்சில் ஸ்ரீநாத் மற்றும் கும்பளே.

1999 - 2000ல் ஒரு பெரும்புயல். முன் கூட்டியே ஆட்ட முடிவுகளை தீர்மானித்தல், சூதாட்டச் சர்ச்சை உலக கிரிக்கெட்டை உலுக்க, அசாருதீனுக்கு தடை விதிக்கப் பட, “கடவுள்தலைமையில் தொடர் தோல்விகள், அவரின் மட்டை வீச்சிலும் கவனச் சிதறல். சச்சின் தலைமையை ஏற்க மறுக்க, 2000ஆம் ஆண்டு பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவின் இந்திய பயணத்தில் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் கங்குலி போராளிக் குழுத் தலைவனைப் போல விளங்கினார். கங்குலி தலைவன் என்றால் போரில், வியூகங்களை அமைத்து, படைகளை சிறப்பாக வழிநடத்தி, தனது நாட்டையும், தலைவனையும் காப்பது ஒரு தளபதியின் தலையாய கடமையாகும்.

அதே போல், ராகுல் திராவிட் இருந்தார் சாகசப் பயணம் தொடங்கியது. இதற்குள் திராவிட் மட்டை வீச்சு நுட்ப ரீதியாக சச்சினுக்குஅடுத்த நிலையில் அணியில் தான் இருக்கப் போவதை உறுதி செய்திருந்தார். 1997 தென்னாப்பிரிக்க பயணமும், 1999 நியூசிலாந்து பயணமும் இதற்கு சான்றுகள்.
என்னை பொறுத்தவரை திராவிட் மட்டை வீச்சே ஒர் அழகு தான் திராவிட் பந்தை எதிர்கொள்கிற விதம், தனி அழகு.


சச்சின், கங்குலி, ஷெவாக் போல தங்களது ஆக்ரோஷமான அடிதடி ஆட்டத்தால் அவர்களை அடக்கியாள நினைப்பவர் இல்லை அவர் மிக வேகமாக ஓடி வந்து பந்து போடும் பந்து வீச்சாளரின் பொறுமையை சோதிப்பதில் டிராவிட்டுக்கு நிகர் ட்ராவிட்டுதான்.

மற்றவர்கள் அடிக்கும் பந்தாவது, கள ஆட்டத்தில் உள்ள பந்து பிடிப்பவரின் கைகள் வரை செல்லும். திராவிட் எதிர்கொள்ளும் பந்து அவர் மட்டையின் அருகிலேயே இருக்கும் அதிலும் பந்து வீசுபவரின் திராணியை சோதிப்பது. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்பட்ட ஷோயப் அக்தர் பௌண்டரி லைனில் இருந்து ஓடிவந்து மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி உசுரைக் கொடுத்து பந்து வீசினால் முன்னங்காலை தூக்கி வைத்து தலையை கவிழ்த்து சர்வமரியாதையாக ஒருகட்டைவைப்பார். அடுத்த பந்திற்கு அக்தர்  இன்னும் ஒரு 200 மீட்டர் ஓடவேண்டும். ஒரு ஓவரில் ஒரு கி.மீ நாயாய் பேயாய் அவர் ஓடிக் களைத்த பின் ஆறாவது பந்தில் ஒரு ஃபுல்டாஸோ அல்லது ஓவர் பிட்ச்சோ போட்டால் தலைவர் கவர் ட்ரைவ் அடித்து பௌண்டரிக்கு விரட்டுவார். அது தான் திராவிட்.ஸ்பின்னர் வீசிய பந்து என்றால் பந்து மட்டையுடன் ஒட்டிக்கொண்டுவிடும். ஒரு இன்ச் அகலாது.


அதன் பின்அணியின் மட்டை வரிசை தெண்டுல்கர் திராவிட் மற்றும் கங்குலியை சுற்றி அமைந்தது. வீரேந்தர் சேவாக், விவிஎஸ் லக்ஷ்மண் சேர்ந்து கொள்ள, அசைக்க முடியாத மட்டைவீச்சு கூட்டணி உருவாகியது. டெஸ்ட் கிரிக்கெட்டில்,3ஆம் நிலை ஆட்டகாரர்களின் செயல்பாடே அந்த அணியின், வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும். அதை சிறப்பாக செய்தார் பந்து வீச்சு தாக்குதலுக்கு, இளம் வேக வீச்சாளர்களும், ஸ்ரீநாத்தும், கும்ப்ளேவும். கங்குலியும், ஜான்ரைட்டும் இணைந்து வெளிநாட்டு டெஸ்ட்டுகளில் வெற்றி பெறத் தேவையான அனைத்து அம்சங்களையும் உருவாக்கினர். ஐந்து வருடங்களில் அபாரமான முன்னேற்றம். துணைக்கண்ட ஆடுதளங்களில் 90 சதவிகத வெற்றி, கணிசமான அளவில் வெளிநாட்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் வெற்றிகள், உலகக் கோப்பை இறுதி வரை சென்றனர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களை சமன் செய்தது என தொடர்ந்தது வெற்றிப் பயணம்.


அனைத்திலும் பெரும்பங்கு வகித்தார் ராகுல் திராவிட். டெஸ்ட் போட்டிகளில் அந்த காலகட்டத்தில் உலகின் மிகச் சிறந்த மட்டையாளரகவும், ஒரு நாள் போட்டிகளுக்கு இவரது ஆட்டமுறை சரிவராது என விமர்சித்தவர்களை தலைகுனிய செய்யும் விதத்திலும் ஆடி சாதித்து கொண்டிருந்தார்.ஜோகன்ஸ்பர்கில் 148, ஹேமில்டனில் 190,கொல்கத்தாவில் 180, அடிலெய்டில் 233, ஹெடிங்க்லீயில் 148, ஓவலில் 217, ஜார்ஜ் டவுனில் 144, லாகூரில் 270 என உலகம் முழுவதையும்வென்றிருந்தார். 2004ல் சிட்டகாங்கில் அடித்த சதத்தின் மூலம் உலகின் அனைத்து டெஸ்ட் ஆடும் நாடுகளிலும் சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்தார்.

திராவிட் டெஸ்ட் போட்டியில் பல சாதனை புரிந்த போதும் எனக்கு திராவிடை பற்றி ஹேடன் சொன்ன ஒரு மேற்கோள் தான் நினைவுக்கு வரும் “All this going around is not aggression; if you want to see aggression on a cricket field, look into Rahul Dravid’s eyes.” ஆம் அது மிக சிறப்பான கூற்று திராவிட் விளையாடும் போது அவர் வெளியே போகும் பல பந்துகளை விட்டு விடுவார் Well Left என்று ஒரு சில வர்ணனையாளர்களால் பாரட்டபட்டவர்களில் திராவிடும் ஒருவர் ஆனால் சில பந்தை மிக அழகாக அடிப்பார் அப்போது வர்ணணையில் கேட்கும் வார்த்தை "There is nothing wrong with the ball" அப்போது அவர் அந்த பந்து விச்சளாரை பார்க்கும் பார்வை வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் கேட்ட மூடுறா காட்சிக்கு ஒப்பாகும்.

அணிக்கு மற்ற நாடுகளைப் போல ஆல்ரவுண்டர்களோ, மட்டை வீச்சில் திறன் வாய்ந்த விக்கெட் கீப்பர்களோ கிடைக்காத போது, அணி நிர்வாகம்விக்கெட் கீப்பராக்க திராவிடை அணுகிய போது, மறுக்காமல் அதை ஏற்றார். அதன் மூலம் ஒரு பந்து வீச்சாளரையோ, மட்டை வீச்சாளரையோ அணியில்அதிகமாக சேர்க்க முடிந்தது.

மேலும் திராவிடை பற்றி சொல்லும் போது எனக்கு கவாஸ்கர் சொல்லும் ஒன்று தான் ஞாபகத்திற்க்கு வரும் அது அவர் ஒரு Copy Book Cricketer, ஒரு பந்தை இப்படித்தான் விளையாட வேண்டும் என்று உள்ளதோ அதை அப்படி விளையாடுவார், அவரிடம் சச்சின் போல Paddle Scoop , இல்லை ஷேவாக் போன்ற Upar Cut இல்லை ஆனால் ஆட்டத்தில் நளினம் இருக்கும்.

திராவிட்டின் வெற்றிகள் தொடர்ந்துக் கொண்டிருந்த நிலையில் தோனியின் தலைமையில் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் 4-0 என ஒயிட்-வாஷ் செய்யப்பட்டது. இங்கிலாந்துத் தொடரில் அட்டகாசமாக ஆடித் தனிமனிதனாக இங்கிலாந்தை சிறிதேனும் கலங்கடித்த திராவிட், மோசமான ஆஸ்திரேலியத் தொடருடன் ஓய்வை அறிவித்தார். முன்னரே 2011 இங்கிலாந்துத் தொடருடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப் பெற்றிருந்தார்.

2013 ஐபிஎல் 20-20 காலக்கட்டம். இளைஞர்களுக்கான ஆட்ட வடிவம் இதுவென்று பல கிரிக்கெட் தெரிந்த/தெரியாத விமர்சகர்களும், ரசிகர்களும் பிதற்றி கொண்டிருந்த வேளையில் நடக்கிறது ஆட்டம். கடந்த இரு தசாப்தங்களின் மிகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவர், தனது வாழ்வின் முதல் ஆட்டத்தை ஆடும் முனைப்புடன் இளைஞனைப் போல களமிறங்குகிறார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வேளையில் இருந்த ஆர்வம், முனைப்பு, உடல் தகுதி ரன் குவிக்கும் வேட்கை எதுவும் மறையவில்லை. ஆட்டம் துவங்குகிறது, முதல் பத்து நிமிடங்களுக்கு ஷாட்டுக்களை டைம் செய்ய முடியவில்லை. ரன் குவிப்பது கடினமாகத் தெரிகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஓட்டங்களை பெற முடிவு செய்து குறுகிய ஒற்றை ஓட்டங்களை போராடி பெறுகிறார், என அனைவரும் முடிவுக்கு வருகிற சமயத்தில், காலத்தை பின்னோக்கி நகர வைக்கிறார் திராவிட்.

முதல் போட்டியிலேயே அரை சதம். ஆட்டத் தொடரில் வழக்கம் போல தொடர்ந்து அவசியமான நேரத்தில் முக்கிய ஓட்டங்களைக் கொடுக்கும் மட்டை வீச்சாளர், இளம் வீர்ர்களுக்கு பயிற்றுனர், மிகத் திறமையாக வழி நடத்தும் அணித் தலைவர், அணியின் நலனுக்காக மட்டை வரிசையில் தன் இடத்தை கீழிறக்கி இளம் அதிரடி வீர்ர்களுக்கு வாய்ப்பளிக்கும் அணி உணர்வு கொண்ட ஆட்டக்கார்ர், எதிரணி வியூகங்களை தகர்த்து மற்றும் அவர்களுக்கு எதிராக வியூகங்கள் வகுத்தல் மூலம் வெற்றிகளை குவித்தவர் என பல பரிமாணங்களில் இந்த தொடரில் மின்னினார். சூதாட்ட சர்ச்சைகளுக்கு இடையிலும் ராஜஸ்தான் அணியை அரையிறுதி வரை முன்னேற்றினார். தொடர்ந்து தற்போது அக்டோபரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீகிலும் இறுதிப் போட்டி வரை முன்னேற்றினார். தனது அணித் தலைவனைப் போல் போராடித் தான் இறுதிப் போட்டியில் தோற்றது ராஜஸ்தான் அணி. இத்தொடருடன் திராவிட் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து தன்னை விலக்கிக் கொள்கிறார்.


எனக்கு சில சமயம் இருக்கும் வருத்தம் திராவிட்டிற்கு ஒரு உலக கோப்பை அணியில் கூட இடம் கிடைக்கவில்லையே என்று ஆம் அவர் பல நேரங்களில் சூரியன் மறைத்த நட்சத்திரமாகவே இருந்தார். சச்சின் , கங்குலி, ஷேவாக் பொன்ற சூரியன்கள் அவரை மறைத்தது, இதனை காலிஸ் மிக துல்லியமாக ஒரு பேட்டியில் திராவிட் இந்தியாவை தவிர எந்த நாட்டிற்கும் விளையாடியிருந்தாலும் சச்சினை விட உயர்ந்திருப்பார். அதற்கு என் ஆசிரியர் ஒருவர் பேசும் போது மிக சரியாக சொன்னார் உலக கோப்பைக்கு திராவிட் கிடைக்கவில்லை, ஆம் அது உண்மைதான் திராவிடிடன் உலக கோப்பை தோற்றது.


கிரிக்கெட்டிற்க்கு அப்பாற்பட்டு திராவிடை நான் ரசிக்க காரணம் அவரின் இலக்கிய அறிவு அவர் ஒரு இலக்கிய வித்தகன். ஹர்ஷா போக்ளேயும் அவர் மனைவியும் எழுதிய நூல் ஒன்றுக்கு அணிந்துரை அளித்த போது, ஓநாயின் வலிமைக்கு அதன் கூட்டம் தான் காரணம், கூட்டத்தின் வலிமைக்கு ஓநாய் காரணம்(The Wolf lived for its Packs) என்று கிப்ளிங் வாசகத்தைக் குறிப்பிட்டிருந்தார். அது அவருக்கும் பொருந்தும். ஆஸ்திரேலியா வில் அவர் ஆற்றிய பிராட் மேன் பேருரை குறிப்பிடத் தக்கதாகும். கிரிக்கெட் குறித்த அவருடைய ஆழ்ந்த ஞானம் மட்டும் அங்கு வெளிப் படவில்லை. அவருடைய இலக்கிய அறிவும் ரசனையும் வெளிப்பட்டது.


இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் என்று சச்சின் பார்க்கப்படுவது எவ்வளவு சரியோ அந்த அளவிற்கு சரி, டெஸ்ட் போட்டிகளின் அடையாளமாக டிராவிட் பார்க்கப்படுவதும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவருக்கான நியாயமான இடம் வழங்கப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. அவர் போன்ற ஒரு முழுமையான கிரிக்கெட் அளுமையை உலக அரங்கிலேயே அடையாளம் காட்டுவது அரிது. எதிர்காலத்தில், இந்தியாவிற்கு இன்னொரு சச்சின் கிடைக்கக்கூடும். பல சேவாக்குகளும், தோனிகளும் கிடைக்கக்கூடும். ஆனால், டிராவிட் போன்ற ஒரு ஆட்டக்காரர் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. Puristகளின் கடைசி பிரதிநிதியாக இருந்தவர் அவர்.


அன்று சிலையாக இன்று இளைஞர்களை செதுக்கும் சிற்பியாக அது திரைப்படத்திற்கு முன் புகையிலைக்கு எதிராக போடப்படும் விளம்பரமோ இல்லை U-19 பயிற்றுனராகவோ செதுக்குகிறார்.


களத்தில பெருமளவில் கட்டை வைத்து ஒன்றும் இரண்டுமாக பொறுக்கும் ராகுல் திராவிட் எங்கள் நெஞ்சங்களில் அவர் ஆடும் Square Cut Boundary யாய் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

We miss you Dravid.

Comments

  1. Dravid world cup lam adirkarru ne 1999,2003,2007 world cups adirkarru

    But world cup geichadu illai

    Vvs laxman dan 1 world cup match kuda velandadu illai

    ReplyDelete
    Replies
    1. You are great and enthusiastic script writer ⭐⭐⭐

      Delete

Post a Comment